| ADDED : பிப் 26, 2024 05:36 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் ரூ.1.63 கோடி செலவில் நவீன எரிவாயு தகன மேடை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் சலவாதி ரோட்டில் மட்டும் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. நகரம் விரிவாக்கம் அடைந்து, மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், திண்டிவனத்தில் புதுச்சேரி சாலையில் உள்ள மயானத்தில் மேலும் ஒரு நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நகராட்சி முடிவு செய்தது.இதற்கு அந்த இடத்தில் குடியிருப்பவர்கள் மற்றும் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, தகன மேடை, செஞ்சி சாலையில் திருவள்ளுவர் நகர் சுடுகாட்டிற்கு மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், அனைத்து கட்சி கவுன்சிலர்களும், புதுச்சேரி சாலையில் மயானம் அமைந்துள்ள இடத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் கொண்டு வந்தனர். இதுகுறித்து கவுன்சிலர்கள் சார்பில் அமைச்சர் மஸ்தானிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.அதனையடுத்து, புதுச்சேரி சாலையில் மயான இடத்தில், நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நகராட்சி சார்பில் 1.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி அமைச்சர் மஸ்தான் நவீன எரிவாயு தகன மேடை அமைப்பதற்கான பூமி பூஜையை நடத்தி வைத்தார். ஆனால், அங்கு ஆக்கிரமித்து குடியிருப்போர் தங்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்துவிட்டு, பணிகளை துவக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வருவதால் எரிவாயு தகன மேடை பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.நகராட்சி சார்பில் சிறிய அளவில் பாதை ஒதுக்கி கொடுப்பதாகக் கூறியும், பெரிய பாதை அமைத்து தர வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் பிரச்னை செய்து வருகின்றனர்.இதனால் நவீன எரிவாயு தகன மேடை அமைப்பதற்கான திட்டப்பணிகள் நிறைவேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.தற்போது 15வது வார்டை சேர்ந்த பொதுமக்கள், இட நெருக்கடி அதிகம் உள்ள கர்ணாவூர் ஓடை பகுதியை, சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலத்தில் ஓடை பகுதியில் தண்ணீர் செல்லும் போது, இறந்தவர்களின் உடல்களை ஓடை கரையோரம் புதைக்கும் அவலம் பல ஆண்டுகளாக உள்ளது.பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரி சாலையில் உள்ள மயான இடத்தில் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை அமைப்பதற்கான பணியைத் துவக்கி விரைந்து முடிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.