அடிப்படை பிரச்னைகள் தீர்க்காததால் மக்கள்... அவதி ; நகராட்சியின் நிர்வாக குளறுபடியால் சிக்கல்
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் பல வார்டுகளில் மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்துவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. இதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த வார்டுகளில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்னைகளான குடிநீர், கழிவுநீர், துாய்மை, சாலை வசதி சார்ந்த பிரச்னைகள் கடந்த 3 ஆண்டுகளாக சரிசெய்யப்படவில்லை.மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை கூறினாலும், நகராட்சி நிர்வாகம் அதனை சரிசெய்ய முன்வருவதில்லை. இதில் பெரும்பாலும் அ.தி.மு.க., சுயேச்சை கவுன்சிலர்களின் வார்டுகளில் மக்களின் பிரச்னைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், ஆளும் கட்சி கவுன்சிலர் வார்டுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.விழுப்புரம் நகரில் 1வது வார்டு, 4வது வார்டு, 6வது வார்டு, 11வது வார்டு, 13வது வார்டு உட்பட 15க்கும் மேற்பட்ட வார்டுகளில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்னைகளான கழிவுநீர் அகற்றம், சாலை வசதி உள்ளிட்டவை தீர்க்கப்படாமல் உள்ளது.நகராட்சியில் விசாரித்தபோது, நகராட்சியின் பொது பிரிவு, பொறியியல் பிரிவு, சுகாதாரம், நகரமைப்பு துறைகளில் பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.இதனால், பொதுமக்களுக்கு அடிப்படை தேவை பணிகளை மேற்கொள்ள முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருவதாகவும், ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை வழங்கி, அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர்.விழுப்புரம் முழுதும் பாதாள சாக்கடை கழிவுநீர் அடைப்பு பிரச்னை பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. இந்த நிலையில், சாலை பணி, கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் பிரச்னைகளும் சரிசெய்யப்படாமல் உள்ளதால், கவுன்சிலர்கள் தங்கள் பகுதி மக்களுக்கு பதில் அளிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.விழுப்புரம் நகராட்சியில் நிலவும் நிர்வாக குளறுபடிகள், ஆளும்கட்சி, எதிர்கட்சி என்ற பாகுபாடுகளை களைந்து, அனைத்து வார்டுகளிலும் மக்களின் அடிப்படை தேவையான சாலை, குடிநீர், கழிவுநீர் பிரச்னைகளை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.