| ADDED : நவ 13, 2025 06:58 AM
விழுப்புரம்: விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரியில் நடந்த கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. விழுப்புரம் அண்ணா பல்கலை., அரசு பொறியியல் கல்லுாரியில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில், இந்தாண்டுக்கான கல்லுாரி கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. கடந்த அக்.22ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. கவிதை, சிறுகதை, ஓவியம், நடனம், நாடகம் போன்ற 30 வகையான போட்டிகளில், 350 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தனித்திறனை வெளிப்படுத்தினர். இக்கலைத்திருவிழா போட்டி நிறைவாக, பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. கல்லுாரி கலையரங்கில் நடந்த விழாவிற்கு கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை வகித்தார். பேராசிரியர் பழனி வரவேற்றார். தமிழ்த்துறை பேராசிரியர் துரை, ஆங்கில துறை பேராசிரியர் தமிழ்செல்வி முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர். விழுப்புரம் மாவட்ட திறன் மேம்பாட்டு மைய உதவி இயக்குநர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கலை திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள், மாண வர்கள் திரளாக கலந்து கொண்டனர்.