| ADDED : டிச 04, 2025 05:31 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கொட்டும் மழையிலும் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழுப்புரம் பெரியநாயகி சமேத கைலாசநாதர் கோவிலில், திருகார்த்திகை தீப திருவிழா வழிபாடு நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து, 5:00 மணிக்கு திருகார்த்திகை தீபத்திருவிழா சிறப்பு வழிபாடுகள் தொடங்கி நடந்தன. தொடர் மழை பெய்ததால், மாலை 6:30 மணிக்கு கோவில் வளாகத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கோவில் முன்பு சொக்கபனை கொளுத்தப்பட்டது. பெண்கள் 108 அகல் விளக்கேற்றினர். தொடர்ந்து, கோவில் கோபுரத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதே போல், விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு முத்துமாரியம்மன் கோவில் நேற்று மாலை 6:00 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, அனைத்து சன்னதிகளிலும் தீபங்கள் ஏற்றினர். இதனையடுத்து, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவில், கீழ்ப்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவில், மகாராஜபுரம் சுந்தரேஸ்வரர் கோவில்களில் மகா தீபம் ஏற்றி, வழிபாடுகள் நடந்தன. மேலும், விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில், சென்னை சாலை பாலசுப்ரமணியர் ஆலயம், பூந்தோட்டம் முத்துமாரியம்மன், நேருஜி சாலை வீரவாழி மாரியம்மன், ரயிலடி விநாயகர், கோட்டை விநாயகர், கணபதி நகர் கற்பக விநாயகர் உள்ளிட்ட கோவில்களில், நேற்று மாலை 6:00 மணிக்கு அகல் விளக்குகள் ஏற்றி கார்த்திகை தீபத்திருவிழா வழிபாடுகள் நடந்தன.