உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுார் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க நீண்ட நாட்களாக... எதிர்பார்ப்பு; கிளியனுார் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

வானுார் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க நீண்ட நாட்களாக... எதிர்பார்ப்பு; கிளியனுார் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

வானுார்: வானுார் ஒன்றிய அலுவலகத்தை இரண்டாகப் பிரித்து, கிளியனுாரை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியத்தை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. வானுார் (தனி) தொகுதியில், வானுார் மற்றும் கண்டமங்கலம் ஆகிய இரண்டு ஒன்றியங்கள் உள்ளன. வானுார் ஒன்றியத்தில், 65 ஊராட்சிகளில், 227 கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் நாள்தோறும் பல்வேறு பணிகளுக்காக, வானுார் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக, புதிய வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் வழங்குதற்கும், சாலை பணிகள், குடிநீர் பிரச்னை உள்ளிட்ட முக்கிய அடிப்படை பிரச்னைகள் குறித்து மனு அளிக்கவும் தினசரி ஏராளமானோர் குவிகின்றனர். திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வானுார் ஒன்றிய அலுவலகத்திற்கு, வானுாரை சுற்றியுள்ள, 34 ஊராட்சிகளில் இருந்து மக்கள் வந்து செல்லும் வகையில், 15 முதல் 20 கி.மீ., துாரத்திற்குள் அனைத்து கிராமங்களும் அமைந்துள்ளன. மீதமுள்ள 31 ஊராட்சிகள் கிளியனுாரை சுற்றி அமைந்துள்ளன. இக்கிராம மக்கள், வானுார் ஒன்றிய அலுவலகத்திற்கு 30 முதல் 35 கி.மீ., துாரம் கடந்து வரவேண்டியுள்ளது. பைக் வசதி இருப்பவர்கள், வானுார் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு சுலபமாக வந்து செல்கின்றனர். வாகன வசதி இல்லாதவர்கள் தென்கோடிப்பாக்கம், கிளியனுார் வரை ஒரு பஸ்சிலும், அங்கிருந்து வானுாருக்கு ஒரு பஸ்சிலும் வர வேண்டிய நிலை உள்ளது. இது, கிராம மக்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. குறிப்பாக மரக்காணம் ஒன்றியத்தை ஒட்டியுள்ள கிளாப்பாக்கம், நாணக்கல்மேடு, காயல்மேடு, சித்தலப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் வெகு துாரத்தில் அமைந்துள்ளன. 45 ஊராட்சிகளை கொண்ட கண்டமங்கலம் பகுதியில் தனியாக பி.டி.ஓ., அலுவலகம் அமைந்துள்ளது. அதே போன்று வானுார் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, கிளியனுாரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஒன்றியத்தை உருவாக்க வேண்டும். இதுவே கிளியனுாரை சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கிளியனுாரை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்கப்படும் என சட்டசபையில், 110 விதிகளின் கீழ் அறிவித்தார். ஆனால், அதை செயல்படுத்தாததால் அந்த அறிவிப்பு காலவாதியாகிப் போனது. அதன் தொடர்ச்சியாக புதிய ஒன்றியத்தை உருவாக்க வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி, சட்டசபையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆளும் கட்சியில் உள்ள நிர்வாகிகளும் தலைமைக்கு அழுத்தம் தந்து வருகின்றனர். இன்னும் அரசு செவிசாய்க்காமல் இருந்து வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் கிளியனுாரை சுற்றியுள்ள குக்கிராம மக்களுக்கும் எளிதாக சென்றடைந்திட, வானுார் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து கிளியனுாரை புதிய ஒன்றியமாக, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ