உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பால் நடத்தை விதிகள் மீண்டும் அமல்: விழுப்புரம் மாவட்டத்தில் குறைதீர் கூட்டங்கள் ஒத்திவைப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பால் நடத்தை விதிகள் மீண்டும் அமல்: விழுப்புரம் மாவட்டத்தில் குறைதீர் கூட்டங்கள் ஒத்திவைப்பு

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்,விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., வாக இருந்த தி.மு.க. மாவட்ட செயலாளர் புகழேந்தி, உடல் நலக்குறைவால் கடந்த ஏப்.6ம் தேதி இறந்தார். இதனால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இத்தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பழனி கூறியதாவது:விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 14ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் இறுதி நாள் 21.6.2024, மனுக்கள் பரிசீலனை 24.06.2024, வேட்புமனுக்கள் திரும்ப பெறுதல் 26.6.2024 (புதன் கிழமை). இதனையடுத்து, 10.7.2024 (புதன் கிழமை) ஓட்டு பதிவு நடக்கும். பிறகு, ஓட்டு எண்ணிக்கை 13.7.2024 (சனிக்கிழமை) நடைபெறும்.இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் 10.6.2024 முதல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நடைமுறைக்கு வருவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில், தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்யலாம்.தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமீறல்களை கண்டறிவதற்காக, தொகுதி வாரியாக பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணிபுரிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுவில், தலா ஒரு உயர் அலுவலர் தலைமையில், அலுவலர்கள், போலீசாரும் பணி மேற்கொள்ள உள்ளனர்.வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிப்பதற்கு விக்கிரவாண்டி தொகுதியில் கணக்கீடு குழு, வீடியோ பதிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் '1950” என்ற இலவச அழைப்புடன் கூடிய வாக்காளர் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தினை தொடர்பு கொண்டு வாக்காளர் பட்டியல், ஓட்டுச்சாவடி தொடர்பாக தகவல்களை பெறலாம்.கடந்த 27.3.2024ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதிக்கு மொத்தம் 1,15,749 ஆண் வாக்காளர்களும், 1,18,393 பெண் வாக்காளர்களும், 31 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,34,173 வாக்காளர்கள் உள்ளனர்.தேர்தல் ஆணைய உத்திரவின்படி 10.6.2024 முதல் விழுப்புரம் மாவட் டம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. நடத்தை விதிகளின்படி, பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், மனுநீதி நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த கூட்டங்களும், தேர்தல் நடத்தை விதிகள் நிறைவு பெறும் வரை நடைபெறாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை