| ADDED : ஆக 29, 2011 10:26 PM
செஞ்சி : மேல்மலையனூரில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் நிரந்தர பஸ்நிலையம் இல்லாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மழைக்கு ஒதுங்கவும், குடிக்க குடிநீர் இன்றியும், கழிப்பிட வசதிகள் இன்றியும் மிகுந்த வேதனைக்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் உள்ள முக்கியமான ஆன்மிக தலங்களில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலும் ஒன்று. சாதாரண நாட் களிலும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று நள்ளிரவு 12 மணிக்கு இங்கு நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். எந்த பருவ காலத்திலும் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்கள் கூட்டம் குறைவதில்லை. இது மட்டுமின்றி இங்கு நடக்கும் மாசி தேர் திருவிழாவும், மயான கொள்ளை நிகழ்ச்சியும் மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். அங்காளம்மனை குலதெய்வமாக வழிபடுபவர்கள், ஆடி மாதத்தில் குடும்பத்துடன் இங்கு வந்து பொங்கல் வைத்து, குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்தி, நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். இதனால் ஆடி மாதம் முழுவதும் மேல்மலையனூரில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். பக்தர்களின் வருகை அதிகரிக்கும் விழா காலங்களில் அரசு போக்குவரத்து கழகம் மூலம் நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்களை இயக்குகின்றனர். அத்துடன் தனியார் டூரிஸ்ட் பஸ், வேன், கார் என ஒவ்வொரு விழாவின் போதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மேல்மலையனூரில் குவிகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பல மடங்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மேல்மலையனூரில் இருந்த பஸ் நிலையம் மட்டும் அதே நிலையிலேயே உள்ளது. விழா காலங்களில் பஸ்களை இந்த பஸ்நிலையத்தில் அனுமதிப்பதில்லை. ஊருக்கு வெளியே இரண்டு, மூன்று இடங்களில் தனியார் விவசாய நிலங்களை வாடகைக்கு எடுத்து தற்காலிக பஸ்நிலையம் அமைக்கின்றனர். தற்காலிகமாக அமைக்கும் பஸ் நிலையங்களில் 20 முதல் 30 பஸ்கள் வந்தவுடன் நிரம்பி விடு கின்றது. பின்னர் வரும் ஆயிரக்கணக்கான வாகனங்களை மேல்மலையனூரின் சந்து பொந்துகளிலும், பிரதான சாலைகளில் குறுக்கிலும் நிறுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது. நேற்று முன்தினம் மேல்மலையனூரில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்காக வந்த வாகனங்களுக்காக அவலூர்பேட்டை, கொடுக்கன்குப்பம், வளத்தி சாலைகளில் தலா ஒரு தற்காலிக பஸ் நிலையமும், சிறு தலை பூண்டி சாலையில் மூன்று இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஏற்பாடுகள் யானை பசிக்கு சோளப்பொறியை போன்று வழக்கம் போல் இட நெருக்கடி ஏற்பட்டது. வளத்தி சாலையில் 5 கி.மீ., தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று இரவு 10 மணிக்கு மேல் மேல்மலையனூருக்கு எந்த வாகனமும் வரமுடியாமல் எல்லா சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேல்மலையனூருக்கு 5 அல்லது 6 கி.மீ., தூரத்தில் வாகனங்களை நிறுத்தி விடுவதால் அமாவாசை இருட்டில் பக்தர்கள் கோவிலுக்கு பல கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரும் மேல்மயைனூர் பஸ் நிலையத்தில் மழை வந்தால் ஒதுங்குவதற்கு சிறிய கொட்டகை கூட கிடையாது. தற்காலிக பஸ் நிலையத்திலும் கொட்டகை கிடையாது, கழிப்பிடம், குடிநீர் என எந்த அடிப்படை வசதிகளும் பக்தர்களுக்கு கிடைப்பதில்லை. இப்பிரச்சனைக்கு தீர்வு காண நிரந்தரமாக பெரிய அளவில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமால் உள்ளது. ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும், மாவட்ட உயர் அதிகாரிகள் மாறும் போதும் மேல்மலையனூரில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தும் சடங்கு நடக்க தவறுவதில்லை. ஆனால் பஸ்நிலையம் மட்டும் இதுவரை வந்த பாடில்லை. இந்த முறை பொறுப்பேற்றுள்ள புதிய அரசு இப்பிரச்னைக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து புதிய பஸ்நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.