| ADDED : செப் 26, 2011 10:41 PM
தியாகதுருகம் : அமாவாசை என்பதால் இன்று அதிகளவில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் வரும் அக்., 17, 19 ஆகிய இரு தேதிகளில் நடத்த மாõநில தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுவதாலும், சுயேச்சையாக பலர் களம் இறங்க வாய்ப்புள்ளதாலும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் பலரும் வேட்பாளர்களாக களம் இறங்குவதால் தேர்தல் களைகட்ட துவங்கியுள்ளது. கடந்த 22ம் தேதி துவங்கிய வேட்பு மனு தாக்கல் வரும் 29ம் தேதி மாலை 3 மணியுடன் முடிகிறது. சில நாட்கள் தள்ளிபோகும் என்று எதிர்பார்த்த நிலையில் தேதி அறிவித்த அடுத்த நாளே வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் துவங்கியதால் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. சுதாரித்துக் கொண்டு அவசர அவசரமாக மனுதாக்கலுக்கு தேவையான சான்றுகளை தயார்படுத்த பரபரத்தனர். இதனால் மனுதாக்கல் துவங்கியது முதல் மந்தமாகவே இருந்தது. இன்று நிறைந்த அமாவாசை தினம் என்பதால் பலரும் மனுதாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று ஒரே நாளில் ஏராளமானவர்கள் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.