மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
5 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
5 hour(s) ago
சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் உள் குத்தகைக்கு விட்டு விதிமீறி பட்டாசு தயாரிக்கப்படுவதால் தொடர் விபத்து ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.இம்மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதியில் நாக்பூர், டி.ஆர்.ஓ., சென்னை உரிமம் பெற்ற 1074 பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசு ஆலைகளில் எப்போதாவது, எதிர்பாராமல் வெடி விபத்து ஏற்படுவது இயல்புதான். அவ்வாறு ஏற்படும் வெடி விபத்தில் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால் ஆலைகளில் பாதுகாப்பின்றி, விதி மீறல்களுடன் பட்டாசு உற்பத்தி தயாரிப்பதால் ஏற்படும் வெடி விபத்தில் உயிர்பலி ஏற்படுவது வருந்தத்தக்கது. 5 மாதத்தில் 28 பேர் பலி
2024 ல் மட்டும் இந்த ஐந்து மாத காலத்தில் ஜனவரியில் ஐந்து விபத்துகளில் ஆறு பேர் பலியாகி உள்ளனர். மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். பிப்ரவரியில் மூன்று விபத்துகளில் 12 பேர் பலியாகி உள்ளனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர். மே-யில் மூன்று விபத்துகளில் 10 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 28 பேர் பலியாகியுள்ளனர். விதிமீறல்
இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம் பட்டாசு ஆலைகள் விதி மீறி இயங்கியது. பட்டாசு ஆலை வைப்பதற்காக உரிமம் பெற்ற ஒருவர், தனது ஆலையை மற்றவருக்கு குத்தகைக்கு விடுவது இயல்பு. இதுவே விதிமீறல் என்ற நிலையில் குத்தகைக்கு எடுத்த நபர் ஆலையில் உள்ள அறைகளை பல்வேறு நபர்களுக்கு தனித்தனியாக உள் குத்தகைக்கு விடுகின்றார். இங்கே தான் கூடுதல் விதிமீறல் ஆரம்பமாகிறது. அறைக்கு 4 பேர் அனுமதி
உதாரணமாக நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் குறைந்தது 40 அறைகள் இருக்கும். இதில் அனைத்து அறைகளுமே வெவ்வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விடப்படுகின்றது. பட்டாசு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படும் அறையில் அளவைப் பொறுத்து அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே இருக்க வேண்டும். மணி மருந்து அலசும் பணி மேற்கொள்ளப்படும் அறையில் இரு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். மூன்று மடங்கு பணியாளர்கள்
ஆனால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட பட்டாசு ஆலைகள் இந்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் மூன்று மடங்கு பணியாளர்களை கொண்டு உற்பத்தி செய்கின்றன. ஏனெனில் உள் குத்தகைக்கு எடுத்த நபர்கள் உற்பத்தியை பெருக்குவதற்காக அதிக ஆட்களை வைத்து அதிக மருந்துகளை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கின்றனர். மேலும் ஆலைக்கு உள்ளே மரத்தடியில் பாதுகாப்பின்றி பட்டாசு உற்பத்தி பணி மேற்கொள்ளப்படுகின்றது. இதுபோல் விதிமீறி உற்பத்தி செய்யப்படும் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தினக் கூலி அதிகமாக கிடைப்பதால் விபத்து ஏற்படும் என தொழிலாளர்களுக்கு தெரிந்தே தவறு செய்கின்றனர். தவிர இங்கு எந்த விதியும் கடைபிடிக்கப்படுவதில்லை. பலிகடாவாகும் மேலாளர் போர்மேன்கள்
ஏற்கனவே தாயில்பட்டி அருகே கனஞ்சாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்திற்கு உள்குத்தகைக்கு விடப்பட்டதே காரணம். மேலும் ஏழாயிரம்பண்ணை அருகே நடந்த வெடி விபத்திற்கும் விதிமீறலே காரணம். எந்த விபத்து நடந்தாலும் அதில் பட்டாசு ஆலை உரிமையாளர் சிக்குவதில்லை. மேலாளர், போர்மேன் போன்றவர்கள் பலிகடா ஆக்கப்படுவார்கள். ஆலை உரிமையாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்தாலே இந்த விதிமீறல்கள் தடுக்கப்படும். ஆனால் அவர்கள் குத்தகைக்கு விடுவதோடு சரி. அதன் பின்னர் கண்டு கொள்வதில்லை. இதனால் குத்தகைக்கு எடுத்தவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு உற்பத்தி பணியை மேற்கொள்கின்றனர். ஆய்வால் உயிர்பலியை தடுக்கலாம்
ஆலைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு இந்த தவறு தெரிந்தும் கண்டுகொள்வதில்லை. இதனால் உயிர் பலி தான் அதிகரித்து வருகிறது. எனவே வரும் காலங்களில் இது போன்று விதி மீறும் இயங்கும் பட்டாசு ஆலைகளில் முறையாக ஆய்வு மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5 hour(s) ago
5 hour(s) ago