| ADDED : மார் 22, 2024 04:14 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகர் முழுவதும் உள்ள ரோடுகள் கிடங்காகவும், குண்டும் குழியுமாகவும், வாறுகால்கள் சேதமடைந்து கழிவு நீர் தேங்கியும், நகராட்சி பூங்காக்கள் பூட்டியும் கிடப்பதால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகராட்சி உருவாகி பல ஆண்டுகளாகியும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. நகரின் பிரதான ரோடு 13 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் ரோடாக போடப்பட்டது. தரமற்ற பணியால் 3 ஆண்டுகளில் ரோடு பல பகுதிகளில் கிடங்காக மாறி விட்டது. 10 ஆண்டுகளாக மக்கள் இந்த ரோட்டில் பயணித்து முதுகு வலி வந்தது தான் மிச்சம். சிமென்ட் ரோட்டின் காலம் 20 ஆண்டுகள் என்பதால், புதிய ரோடு அமைக்க இன்னமும் 7 ஆண்டுகள் உள்ளது. அதுவரை இந்த ரோட்டில் தான் மக்கள் பயணிக்க வேண்டும்.நகரின் குடிநீர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. வைகை, தாமிரபரணி, புதிய தாமிரபரணி குடிநீர் என 3 திட்டங்கள் இருந்தும், மக்களின் குடிநீர் தேவையை நகராட்சி முழுமையாக தீர்க்க முடியவில்லை. சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்குகின்றன. இது தவிர, மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க நகர் முழுவதும் பகிர்மான குழாய்கள் பதிக்க தோண்டி வருகின்றனர். நகர் முழுவதும் தெருக்கள் குதறி போடப்பட்டுள்ளது. தெருக்களில் உள்ள பேவர் பிளாக் கற்களை பெயர்த்து எடுத்து, பணி முடிந்த பிறகும் சரி செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில் பாதாள சாக்கடை திட்டம் துவக்க விழா நடந்துள்ளது. இதற்கும் தெருக்கள் தோண்டப்படும் என மக்களுக்கு மேலும் பீதியை கிளப்புகின்றனர். என்றைக்குத்தான் நகருக்கு விமோசனம் கிடைக்கும் என்று கேள்வியில் உள்ளனர்.நகர் முழுவதும் ஆக்கிரமிப்புகள், மக்கள் பயன்பாட்டிற்கு வராத பூங்காக்கள், திறப்பு விழா கண்ட புதிய பூங்காக்களும் பூட்டியே கிடக்கின்றன. மெத்தனமாக நடக்கும் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் என நகரில் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே மக்கள் நொந்து வாழ வேண்டிய நிலையில் உள்ளனர்.