| ADDED : ஜூலை 05, 2024 02:00 AM
விருதுநகர்,:''ஓய்வு பெறும் கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு பணப் பலன்களை நிறுத்தி வைக்க கூடாது,'' என, விருதுநகரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க(டாக்பியா) மாநில பொதுச்செயலாளர் காமராஜ்பாண்டியன் வலியுறுத்தினார்.அவர் கூறியதாவது: ஓய்வு பெறும் கூட்டுறவு கடன் சங்க செயலர்களின் ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதும், நிறுத்தி வைப்பதும் வாடிக்கையாகி உள்ளது. இதை தவிர்ப்பது உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பதிவாளர் அலுவலகத்தில் பேசியுள்ளோம்.மாநிலத்தில் 4380 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. 150 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. 20 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஆனால் இச்சங்கங்களுக்கு 2500 செயலர்கள் தான் உள்ளனர். இவர்களே மற்ற சங்கங்களை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர்.நகைகளை அடகு வைத்தவர்கள் ஓராண்டிற்குள் திருப்ப வேண்டும். நகைகளை திருப்பிய பின் அத்தொகை நகைக்கடனுக்கும் வட்டிக்கும் ஈடாக வந்தால் பிரச்னை இல்லை. இது பல ஆண்டுகளாக சிக்கல் இல்லாமல் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் தங்கம் மார்க்கெட் இறங்கிய போது அசலுக்கும், வட்டிக்கும் போதவில்லை. இதனால் அத்தொகைக்கு அன்றைய செயலர்கள் தான் பொறுப்பு என்கின்றனர். மற்றொரு பக்கம் 2021ல் அரசு கடன் தள்ளுபடி என அறிவித்தது.துணை பதிவாளர், மத்திய வங்கி பணியாளர்கள் ஆய்வு செய்து தகுதியை உறுதி செய்த அடிப்படையில் கூட்டுறவு செயலர்கள் தள்ளுபடி செய்தனர். இதற்கு பின் தணிக்கைத்துறை ஆய்வில் சிட்டா, அடங்கல் இல்லை என தள்ளுபடியை ஏற்று கொள்ள இயலாது என மறுத்துள்ள பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக அரசிடம் தெரிவித்துள்ளோம்.பணிக்கொடை சட்டத் தின் அடிப்படையில் பணிக்கொடையை எந்த காரணத்திற்காகவும் பிடித்து வைக்க முடியாது. வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை மத்திய அரசு சட்டபடி நிறுத்த கூடாது. செயலர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற பின் பணப்பலன்களை அரசு வழங்க வேண்டும் என்றார்.