| ADDED : ஜூலை 03, 2024 05:32 AM
காரியாபட்டி : நீண்ட இழுபறிக்குப் பின் காரியாபட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடங்கியது. மறுபடியும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. அறிவுப்போடு நின்று விடாமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதை அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது. காரியாபட்டியில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு முக்கு ரோட்டிலிருந்து பஜாரை கடக்க வாகன ஓட்டிகள் படாதபாடு பட்டனர். கடைக்காரர்கள் ரோடு வரை ஆக்கிரமித்து விளம்பர பலகைகளை வைத்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை ரோட்டில் நிறுத்தி இடையூறு ஏற்படுத்தினர். வாறுகால் கட்டும் பணி, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி உள்ளிட்டவைகளால் போக்குவரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வந்தது. ரோட்டோர காய்கறி கடைகள், நடமாடும் காய்கறி கடைகள், வேன் ஸ்டாண்ட் என ரோட்டை ஆக்கிரமித்தனர். போக்குவரத்து நெருக்கடியால் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. நோட்டீஸ் அனுப்பப்பட்டும் பலமுறை அகற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளிப்போனதால், ஆக்கிரமிப்பாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தாசில்தார் மாரீஸ்வரன் தலைமையில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேஷ்குமார், உதவி பொறியாளர் பெரியதிருமாள், ஆர்.ஐ., அழகுராஜா முன்னிலையில் செவல்பட்டியிலிருந்து முக்கு ரோடு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அசோக் எஸ்.ஐ., தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். மறுபடியும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அறிவிப்போடு நின்று விடாமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.