| ADDED : மே 11, 2024 11:12 PM
விருதுநகர்:விருதுநகரில் வீசியசூரைக்காற்றில் மருளூத்து பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த கொடிக்காய், வாழை மரங்கள் வேராடு சாய்ந்தது. விருதுநகர் மருளூத்தை சேர்ந்தவர்கள் வீரபாண்டியன், செல்லப்பாண்டி. இருவரும் தங்கள் நிலத்தில் 150 கொடிக்காய் மரங்களை ஊடுபயிராகவும், கரைப்பகுதிகளிலும் நடவு செய்து 20 ஆண்டுகளாக பராமரித்து வளர்த்து வந்தனர். 3 ஏக்கரில் 3600 வாழை மரங்களை நடவு செய்துள்ளனர்.இந்நிலையில் விருதுநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி வீசியது. இதில் மருளூத்து பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 150 கொடிக்காய் மரங்களின் கிளைகளும், 50 மரங்கள் வேரோடும் சாய்ந்தது. 3 ஏக்கரில் பயிரிடப்பட்ட 3600 வாழைகளில் குலை தள்ளிய நிலையில் இருந்த வாழைகள் சேதமானது. பால்சாமி, வசந்தா என்பவர்களின் கூரை வீடுகளும் சேதமாகியது. எனவே மாவட்டத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.