எந்தவித அறிவியல் தொழில் நுட்பமும் இல்லாத பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நம் முன்னோர்களின் திறமைக்கு சான்றாக பல்வேறு மலைக் கோயில்கள், குடவரைக் கோயில்கள், வேலைப்பாடுகள் கொண்ட கல் மண்டபங்கள் பல உள்ளன. இதனை பார்க்கும் இன்றைய தலைமுறையினர் வியப்படைகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் பல்வேறு இடங்களில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட நகரா மண்டபங்கள் உள்ளன.மன்னர்கள் காலத்தில் இங்குள்ள மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், ஆண்டாள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய நடந்து வரும் வெளியூர் பக்தர்கள் தங்கி இளைப்பாறுவதற்கும், கோயில்களில் பூஜை நேரத்தில் மணி அடித்தவுடன் வழிநெடுக உள்ள கல் மண்டபங்களிலும் மணி அடித்து மதுரை மன்னர்கள் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன இத்தகைய நகரா மண்டபங்கள்.மேலும், ஸ்ரீவில்லிபுத்துாரில் செண்பகத் தோப்பு செல்லும் வழியிலும் மம்சாபுரம் செல்லும் வழியிலும், பட்டத்தரசி அம்மன் கோயில், இந்திரா நகர், பூவாணி விலக்கு உட்பட பல இடங்களில் நகரா மண்டபங்கள் உள்ளன.அரிய பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய இத்தகைய மண்டபங்கள் இன்றைய அரசுத்துறை நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் முறையாக பாதுகாக்கப்படாமல் உள்ளது.இதில் பல மண்டபங்களின் கூரையில் செடி, கொடிகள் வளர்ந்தும், தூண்கள், கல் சுவர்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. பல மண்டபங்கள் புதர் மண்டி, எப்போது இடிந்து விழுமோ என்ற அபாய நிலையில் உள்ளது.ஒரு சில மண்டபங்கள் ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளது. பல மாலை நேர மது கூடமாக மாறி வருகிறது. அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் கட்டப்பட்ட இது போன்ற கல் மண்டபங்களை இன்றைய நவீன தொழில் நுட்ப காலத்தில் கட்டுவது என்பது மிகவும் சவாலான விஷயமாகும்.நமது முன்னோர்களின் திறமையும், பாரம்பரியத்தையும் எதிர்கால சந்ததியினருக்கு தெரிய வைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த நகரா மண்டபங்களை தொல்லியில் துறை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால், சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இத்தகைய நகரா மண்டபங்கள் எந்த ஒரு அரசு துறையினராலும் முறையாக பராமரிக்கப்படாமலும், பாதுகாக்கப்படாமலும் நாளுக்கு நாள் சேதமடைந்து சிதைந்து வருகிறது.இதில் பல மண்டபங்களில் ஓவியங்கள், கல்வெட்டுகள் உள்ளது. இதனை தொல்லியில் துறையினர் ஆராய்ந்து ஓவியங்கள், கல்வெட்டுகள் எக்காலத்தை சேர்ந்தது போன்றவற்றை மக்கள் தெரியும் வண்ணம் செய்ய வேண்டுமென வரலாற்று ஆய்வாளர்கள் விரும்புகின்றனர்.எனவே, சேதமடைந்துள்ள நகரா மண்டபங்களை சீரமைத்து, அதனை முறையாக பராமரித்து அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்தாக உருவாக்க மக்கள் பிரதிநிதிகளும், தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 21--மாவட்டத்தில் பல்வேறு நகரங்களில் பாரம்பரியமிக்க மன்னர் காலத்திய நகரா மண்டபங்கள் பாதுகாக்கப்படாமல் நாளுக்கு நாள் சிதைந்து வருகிறது. இம்மண்டபங்கள் சில தனியார் ஆக்கிரமிப்பிலும், பல சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தும் நிலையும் உள்ளது. இதனை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.