| ADDED : மார் 30, 2024 06:03 AM
சிவகாசி, : எனது சின்னம் மைக் இல்லாமல் எந்த கட்சியும் ஓட்டு சேகரிக்க முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். சிவகாசி அருகே திருத்தங்கலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விருதுநகர் தொகுதி வேட்பாளர் கவுசிக் பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள் என படித்தவர்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். இவர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லும்போது அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை எதிரொலிப்பார்கள். என் சின்னமான மைக் இல்லாமல் எந்த சின்னத்திற்கும் யாரும் ஓட்டு கேட்க முடியாது. பிரசாரம் செய்பவர்கள் அனைவரும் எங்களது சின்னத்தை வைத்துதான் ஓட்டு கேட்கின்றனர். பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் அரசியல் அங்கீகாரம் இல்லாத சமூகத்தினருக்கு தேடி தேடி வாய்ப்பளிப்பது நாம் தமிழர் கட்சி மட்டும் தான், இவ்வாறு அவர் பேசினார். நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், வேட்பாளர் கவுசிக் பாண்டியன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சாத்துாரில் சீமான் பேசியதாவது: லஞ்சம் ஊழல் இல்லாமல் எந்த ஒரு வேலையும் நாட்டில் நடப்பதில்லை என்ற நிலை உள்ளது. எளிமை நேர்மை ஆகிய கொள்கைகளை ஏந்தி நாம் தமிழர் இயக்கம் தேர்தல் களத்தை சந்தித்து வருகிறோம். மருத்துவம் கல்வி அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். எளிமையான, நேர்மையான அரசியல் தலைவர்களான காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் இனி உருவாக மாட்டார்களா என மக்கள் என்னும் நிலை உள்ளது. நிச்சயம் நாங்கள் எளிமை, நேர்மை மிக்கவர்களாக இருப்போம். லஞ்சம் ஊழலற்றஅரசு அமைப்போம்.சம வேலை சம ஊதியம் என்று ஆசிரியர்கள் போராடிய போதும் கொரானா காலத்தில் சேவை புரிந்த மருத்துவர் கள், செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி போராடிய போதும் மாணவர்கள், விவசாயிகள் போராடிய போதும் அவர்களுடன் நின்று போராடி முதல் குரல் கொடுத்தவன் நான். தற்போது நாட்டின் பிரச்சனைக்காக உங்களிடம் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். ஓட்டுக்கு துட்டு கொடுத்தால் வாங்கினால் ஓராண்டு சிறை தண்டனை என்கிறார்கள். அப்படி யாராவது பிடிபட்டிருக்கிறார்களா அவர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கிறதா எண்ணி பாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஓட்டுக்கு துட்டு கொடுப்பவர்கள் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.என்றார்.