| ADDED : ஜூன் 24, 2024 11:59 PM
சிவகாசி : செயல்படாத டிராபிக் சிக்னல்கள் , துார்வாராத வாறுகால் என சிவகாசி சாத்துார் ரோடு பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.சிவகாசி சாத்துார் ரோடு பகுதியில் டிராபிக் சிக்னல்கள் செயல்படாதது முக்கிய பிரச்னையாக உள்ளது. சிவகாசி சாத்துார் ரோடு விலக்கில் பஸ் ஸ்டாண்ட், சாத்துார் ரோடு, பைபாஸ் ரோடு பிரிந்து செல்கின்றது. நகருக்குள் பஸ் ஸ்டாண்டிற்கு வரவேண்டிய அனைத்து வாகனங்கள் இதன் வழியாகத்தான் வரவேண்டும்.இந்நிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட நாளிலிருந்தே டிராபிக் சிக்னல்கள் செயல்படவில்லை. சாதாரண நாட்களிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நிலையில் விசேஷ காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகின்றது.சிக்னல் அருகிலேயே உள்ள டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. மின் கம்பங்கள் அனைத்தும் அடி முதல் உச்சி வரை சிமெண்ட் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. சாத்துார் ரோட்டில் இருபுறமும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது.ஆறுமுகச்சாமி, முன்னாள் கவுன்சிலர்: சிவகாசி பஸ் ஸ்டாண்டில் இருந்து சாத்துார் செல்லும் ரோட்டில் இருபுறமும் உள்ள வாறுகால் துார்வார வில்லை. மேலும் பெரும்பான்மையான இடங்களில் வாறுகாலில் முட்புதர்கள் முளைத்து துார்ந்துள்ளது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி ரோட்டில் ஓடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே வாறுகாலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர்: இப்பகுதியில் ரோட்டில் இருபுறமும் பாதி அளவினை மறைத்து மணல்கள் கொட்டி கிடைக்கின்றது. இதனால் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் மணல்கள் சகதியாக மாறிவிடுகின்றது. எனவே இப்பகுதியில் ரோட்டில் உள்ள மணல்களை அகற்ற வேண்டும். சாத்துார் ரோடு விலக்கிலிருந்து கிழக்கு மயான சாலை செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது.காளிமுத்து, தனியார் ஊழியர்: சாத்துார் செல்லும் ரோட்டில் உள்ள பஸ் டிப்போ அருகே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இவைகளை உடனடியாக அகற்றாததால் ரோட்டிற்கு வந்து விடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.