| ADDED : ஜூன் 02, 2024 02:34 AM
சிவகாசி:விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பசும்பொன் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி, 25. தென்காசி மாவட்டம், சுரண்டையில் உள்ள பேக்கரியில் ஸ்வீட் மாஸ்டராக பணிபுரிந்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த அம்ச ரேணுகா, 22, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அம்ச ரேணுகா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். தங்கப்பாண்டி மே 29 இரவு வேலை முடிந்து சுரண்டையில் இருந்து சிவகாசிக்கு டூ - வீலரில் வந்தபோது குகன்பாறை ---- துலக்கன்குறிச்சி இடையே ரோட்டில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டது.காயமடைந்த அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மே 31ல் சிகிச்சை பலனின்றி தங்கபாண்டி மூளைச்சாவு அடைந்தார். தங்கபாண்டியின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது மனைவி முன் வந்தார்.அவரது உடலில் இருந்து இதயம், நுரையீரல், கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கண்கள் தானமாக வழங்கப்பட்டன. இதனால், ஏழு பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என, டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று காலை திருத்தங்கல் ஆலமரத்துபட்டியில் அரசு மரியாதையுடன் தங்கப்பாண்டி உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. ஆர்.டி.ஓ., விஸ்வநாதன் தலைமையில் டி.எஸ்.பி., சுப்பையா, தாசில்தார் வடிவேல், இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மரியாதை செலுத்தினர்.