| ADDED : ஜூன் 03, 2024 02:35 AM
விருதுநகர்: மல்லாங்கிணர் ஊருணியில் கழிவு நீர் கலந்து மாசடைந்து பச்சை நிறத்தில் மாறியுள்ளது. ஊருணியில் மராமத்து பணி செய்து, வேலி அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கோடை வெயில் வாட்டி வதைத்தால் மல்லாங்கிணறு ஊருணி வற்றியது. தற்போது கோடை மழை பெய்து வருவதால் நீர்வரத்து ஓடைகளில் இருந்து ஊருணிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஊருணிக்கு அருகே உள்ள வீடுகள், கடைகளின் கழிவு நீர் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து பாசி நிறைந்து உள்ளது.இதனால் நீரின் நிறம் பச்சை நிறமாகமாறியுள்ளது. இதே நிலை தொடர்வதால் துார்நாற்றம் வீசி அருகே வசிப்பவர்கள், வாகனங்கள் செல்பவர்கள் சுவாசக்கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர். ஊருணி நீரை பயன்படுத்தமுடியாத நிலையும்,நிலத்தடி நீரும் மாசடைந்து உள்ளது. இது குறித்து உள்ளாட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஊருணி கரையில் குப்பையை கொட்டுவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. மேலும் முட்புதர்கள் அடர்ந்து நிறைந்து இருப்பதால் நீரை உடனடியாக உறிஞ்சி விடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஊருணியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து, மராமத்து பணிகளை செய்து, கரையில் வேலி அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.