சிவகாசி : குடிநீர் பற்றாக்குறையால் பள்ளப்பட்டியில் 20 நாளைக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது, என சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஒன்றிய குழு கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.சிவகாசி ஊராட்சி ஒன்றியக்கூட்டடத்திற்கு குழு துணைத் தலைவர் விவேகன் ராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மினி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம்
முருகன்,காங்.,: பள்ளபட்டி ஊராட்சி காமராஜபுரம் காலனி, லிங்கபுரம் காலனி 56 வீட்டு காலனி ஆகிய பகுதிகளில் 20 நாளைக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்பகுதி மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறார்கள். எனவே குடிநீர் பற்றாக்குறை இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுடர்வள்ளி, அ.தி.மு.க.,: விவேகானந்தா காலனி, சேனையார்புரம் காலனி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பராமரிக்க வேண்டும்.துணைத் தலைவர்: பள்ளப்பட்டி ஊராட்சியில் குடிநீர் திறந்து விடுபவர்கள் அனைவரையும் வரவழைத்து பேசி பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.மாரிமுத்து, அ.தி.மு.க.,: வாடியூரில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு பல மாதங்களாக மின் இணைப்பு கொடுக்காமல் உள்ளது. உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.சின்னத்தம்பி, தி.மு.க.,: மீனம்பட்டியில் போதிய சுகாதார வளாக வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே புதிதாக இரு சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.புளுகம்மாள், அ.ம.மு.க.,: வடபட்டி பகுதியில் பல்வேறு கிராமங்களில் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும்.சண்முகத்தாய், தி.மு.க.,: செங்கமல நாச்சியார் புரத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி சேதமடைந்துள்ளது. சீரமைக்க வேண்டும். ஆண்கள் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.ஜெகத்சிங் பிரபு, அ.தி.மு.க.,: சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கும் முன்னர் பெரியகுளம் கண்மாய் ரோட்டினை சீரமைக்க வேண்டும். ஏனெனில் இந்த ரோடு தான் மாற்றுப் பாதையாக பயன்படுத்தப்பட உள்ளது.துணைத் தலைவர் பதிலளித்துப் பேசுகையில், கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறிய அனைத்து பிரச்னைகளும் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இவ்வாறு விவாதம் நடந்தது.