சென்னை : விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள மணவராயனேந்தலில், 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மணவராயனேந்தலில், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் சரத் ராம் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.அப்போது, இளையராஜா என்பவரது தோட்டத்தில், மண்ணில் புதைந்த நிலையில், 24ம் தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர். இது குறித்து, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுருவிடம் தெரிவித்தனர்; அவர் நேரில் ஆய்வு செய்தார். சிம்மாசனம்
அவர் கூறியதாவது: மணவராயனேந்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருங்கல்லால் ஆன மகாவீரர் சிற்பம், மண்ணில் பாதி புதைந்த நிலையில் உள்ளது. இதில், மகரத்தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவருக்கு பின்னால், பிரபாவளி எனும் ஒளி வட்டமும், அதன் மேற்பகுதி யில் சந்திராதித்தம், நித்தியவிநோதம், சகல பாசனம் ஆகியவற்றை குறிக்கும் முக் குடை அமைப்பும் உள்ளது. அதில், அழகிய கொடிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இந்த சிற்பத்தின் வடிவமைப்பின்படி, 11ம் நுாற்றாண்டாகக் கருதலாம். சமணப்பரவல்
விருதுநகர் மாவட்டத்தில், கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குறண்டி, இருஞ் சிறை, புல்லுார், பாலவ நத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகர நல்லுார், சேத்துார், சென்னிலைக்குடி, கீழ்இடையங்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்ட ஊர்களில், சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மேலும், திருப்புல்லாணியில் இருந்து கமுதி, திருச்சுழி வழியாக, மதுரை செல்லும் பெருவழி பாதையிலும் பல இடங்களில், தீர்த்தங்கரர் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், திருச்சுழியிலும் மகாவீரர் சிற்பம் கிடைத்துள்ளதால், இந்த பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமண சமயம் செழித்திருந்ததை உறுதிப்படுத்துகிறது. அது மட்டுமின்றி, அந்த சிற்பம் இருந்த இடத்தின் சுற்றுவட்டார பகுதிகளில், இரும்பு காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு - சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறியுள்ளன. எனவே, இந்த ஊர், 2,000 ஆண்டுகளாக மக்களின் வாழ்விடப் பகுதியாக இருந்துஉள்ளதை அறிய முடிகிறது. இந்த சிற்பம் மண்ணில் புதைந்து பாதுகாப்பில்லாமல் உள்ளதால், இதை அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.