உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 58 பேர் : ஓராண்டு நீர்நிலை விபத்து உயிரிழப்புகள்: தடுக்க தேவை விழிப்புணர்வு மனப்பான்மை

58 பேர் : ஓராண்டு நீர்நிலை விபத்து உயிரிழப்புகள்: தடுக்க தேவை விழிப்புணர்வு மனப்பான்மை

விருதுநகர்; விருதுநகர் மாவட்டத்தில் நீர்நிலை விபத்துக்களில் ஓராண்டில் மட்டும் 58 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்பார்க்கும் மக்கள் விழிப்புணர்வு மனப்பான்மையோடு செயல்படுவது அவசியம்.மாவட்டத்தில் 2023ல் மட்டும் 58 பேர் நீர்நிலைகளில் மூழ்கி இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கையே மாவட்டத்தில் பெரிய பேரிடராக மின்னல் தாக்குவதும், நீர்நிலை விபத்துக்களும் உள்ளதற்கு உதாரணம். கடந்த ஆண்டு நிலவரப்படி மாவட்டத்தில் அதிகம் பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். அதே போல் நீர்நிலை விபத்துக்களால் உயிரிழப்போரும் அதிகரித்துள்ளனர். கிணறு, கண்மாய், குளம், குவாரியில் தேங்கிய நீர் என பலவகை விபத்துக்களில் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 20 பேர் இறந்துள்ளனர். சிவகாசியில் 13 பேர் இறந்துள்ளனர். இவ்விபத்துக்களில் கண்மாய்களில் மூழ்கி இறப்போர் தான் அதிகம்.மாவட்டத்தில் பல நீர்நிலை அமைப்புகள் இருந்தாலும் அவை பெரும்பாலும் வறண்டும், கருவேல மரங்கள் சூழ்ந்தும் காணப்படுகின்றன. இருப்பினும் மழை பெய்தால் அனைத்து நீர்நிலைகளும் நிறைந்து விடும். இதனால் விடுமுறையில் மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள் நீர்நிலைகளில் குளிக்க சென்று உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. கோடை மழை நேரங்களிலும், பருவ மழை நேரங்களிலும் விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன. மாணவர்கள் எவ்வித பாதுகாப்புமின்றி நீர்நிலைகள் அருகிலோ, குளிக்கவோ செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் பலமுறை அறிவுறுத்தினாலும் இந்த விபத்து தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் கிராமப்புறங்களில் கண்காணிக்க ஆள் இல்லாததால் நீர்நிலைகளில் அசட்டை மனப்போக்குடன் சிறுவர்கள் இறங்கி விளையாடுகின்றனர். ஏற்கனவே விபத்து நடந்த, அபாயகரமான ஆழமுள்ள நீர்நிலைகளில் எச்சரிக்கை விழிப்புணர்வு பலகைகள் பொருத்த வேண்டும். அதோடு நிறுத்தி கொள்ளாமல் சிறுவர்கள், இளைஞர்களிடம் நீச்சல் பழக்குவது அவசியம். அதே நேரம் ஆழமறியாமல் கால் வைக்க கூடாது என்பதற்கும் விழிப்புணர்வு மனப்பான்மை அவசியமாக உள்ளது.விபத்து அதிகம் நடந்த ராஜபாளையம், சிவகாசி கிராமப்புற பள்ளிகளிலே மாணவர்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டும். தற்காப்பு, முதலுதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி