| ADDED : பிப் 15, 2024 04:44 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் கடந்த 10 ஆண்டுகளில் 58 ஆயிரம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் நகரில் இவைகள் பயணம் செய்யும் ரோடுகள் தரமானதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு அருப்புக்கோட்டை வழியாகத்தான் செல்ல வேண்டும். சென்னை, மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு நான்கு வழி சாலை உள்ளது. முக்கியமான ஊராக இருக்கும் அருப்புக் கோட்டையில் ரோடுகள் மோசமான நிலையில் உள்ளன.நகரில் உள்ள ரோடுகள் தார் கண்டு பல ஆண்டுகள் ஆகி விட்டன. புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து காந்திநகர் செல்லும் திருச்சுழி ரோடு, விருதுநகர் ரோடு, நகரில் முக்கியமான ரோடுகள் கிடங்காக உள்ளன. நகரில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ரோட்டில் வாகனம் குதித்து கொண்டே செல்வதால் தண்டுவட பாதிப்பு ஏற்படுகிறது.அருப்புக்கோட்டையில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. அருப்புக் கோட்டையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் 2013 ல் துவங்கப்பட்டது. அதிலிருந்து 10 ஆண்டுகளில், புதிய டூவீலர், கார் 54 ஆயிரத்து 500 வாகனங்களும், லாரிகள், பஸ்கள், மினி வேன்கள் 3 ஆயிரத்து 800 ம், மொத்தம் 58 ஆயிரத்து 300 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.நகரின் முக்கிய ரோடுகளில் தினமும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. ஆனால், நகரில் உள்ள ரோடுகள் இத்தனை வாகனங்கள் செல்வதற்கு தரமற்றதாக உள்ளது. மேடும், பள்ளமுமாக இருக்கும் ரோடுகளில் வாகனங்கள் செல்கிற போது, பழுது ஏற்படுகிறது.நகரில் புதியதாக, அகலமான ரோடு அமைக்க நகராட்சி, நெடுஞ்சாலை துறை மெத்தனம் காட்டி வருகிறது. கடமைக்கு ரோட்டில் ஆங்காங்கு பஞ்சர் பார்க்கும் பணி மட்டும் செய்கின்றனர்.லட்சக்கணக்கான பணம் செலவழித்து புதிய வாகனங்கள் வாங்கி தரமற்ற ரோட்டில் பயணித்து, வாகனங்கள் பழுதாவதுடன், உடல் வலிகளையும் பெற வேண்டியுள்ளது என நகர மக்கள் புலம்புகின்றனர்.