| ADDED : டிச 31, 2025 05:46 AM
காரியாபட்டி: காரியாபட்டி பேரூராட்சியில் அ.தி.மு.க., பா.ஜ., வணிகர்கள் எதிர்ப்பு களுக்கு மத்தியில் வணிக வளாக கடைகள் ஏலம் விடப்பட்டன. காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் எதிரே 110 கடைகள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் ஏலத்தில் பலர் கடைகள் எடுத்தனர். அதற்கு வைப்புத் தொகையாக ரூ. 40 ஆயிரம் உள்ளது. தற்போது அக் கட்டடம் படுமோசமாக இடிந்து விழும் நிலையில் உள்ளது. வேறு வழியின்றி வியாபாரிகள் தொழில் செய்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கடைகள் ஏலம் விடாமல், புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 110 கடைகளுக்கு மறு ஏல ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, நேற்று ஏலம் விட ஏற்பாடுகள் நடந்தன. அப்போது வணிகர்கள், அ.தி.மு.க., பா.ஜ., வினர் உள்ளிட்ட கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வணிகர்கள் கூறுகையில்,'' கட்டடம் எப்போது இடிந்து விழுமோ என அச்சத்தில் உள்ளோம். எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. திறந்த வெளி மது விற்பனை, கழிப்பிடமாக இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் ஏலம் விடாமல் அவரவருக்கு கடை புதுப்பிக்கப்பட்டு வந்தது. தற்போது ஏலம் எடுக்க வைப்புத் தொகையாக ஒரு கடைக்கு ரூ. 25 ஆயிரம், டம்மி ரூ. 25 ஆயிரம் என ரூ. 50 ஆயிரத்திற்கு காசோலை எடுக்க வேண்டி உள்ளது. பெரும்பாலானவர்கள் சிரமத்தில் உள்ளனர். மறுபரிசீலனை செய்து ஏலம் விட கூடாது என்றனர். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி எப்படி இருந்தாலும், மூன்றாண்டுக்கு ஒரு முறை ஏலம் விட வேண்டியது கட்டாயம். அதன் அடிப்படையில் ஏலம் கட்டாயம் நடக்கும் என செயல் அலுவலர் ஆளவந்தான் ஏலம் நடத்தினார். ஏலத்தில் பலர் கலந்து கொண்டனர்.