| ADDED : ஜன 03, 2024 05:49 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளி நேரங்களில் வைக்கும் பேரிகார்டுகள், இரவும் அப்படியே வைக்கப்படுவதால் விபத்தில் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. கிராம பள்ளிகளை தவிர தனியார் பள்ளிகள், மாநில நெடுஞ்சாலை ரோட்டோரமும், இணைப்பு ரோடுகளிலும் அமைந்துள்ளன. பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்காக, ரோடுகளில் வேகத்தடை, பேரிகார்டுகள் வைக்கப்படுகின்றன. வேகத்தடையே போதும் என்கிற சூழலில் கூட சில பள்ளிகள் விளம்பர நோக்கத்திற்காக தங்கள் பெயரில் ஸ்பான்சர் செய்து பேரிகார்டுகளை போலீஸ்துறைக்கு அளித்து பள்ளிக்கு முன் வைக்க செய்கின்றனர். இவ்வாறு வைக்கப்படும் பேரிகார்டுகள் இரவு 8:00 மணிக்கு பிறகும் தொடர்வதால் அப்பகுதிகளில் விபத்து அபாயம் தொடர்கிறது. சில பள்ளிகள் வேண்டும் என்றே தங்களின் விளம்பர பிளக்ஸ் போர்டுகளை ரோட்டோரம் வைத்து விட்டு அதை வாகன ஓட்டிகள் பார்க்க வேண்டும் என்ற விளம்பர நோக்கிற்காகவும் பேரிகார்டுகளை கேட்டு பெறுகின்றனர். ஆகவே மாவட்ட போலீஸ் துறை இது தொடர்பாக ஆய்வு நடத்தி தேவையற்ற இடங்களில் உள்ள பேரிகார்டுகளை அகற்றி இரவு நேர விபத்தை தடுக்க வேண்டும். வேகத்தடை போதும் என்றால் அதோடு முடித்து கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும்.