உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பி.சி., விடுதிகளில் பயோமெட்ரிக் பணிகள் தாமதம்! பொருத்திய இடங்களில் இணையக் கோளாறு

பி.சி., விடுதிகளில் பயோமெட்ரிக் பணிகள் தாமதம்! பொருத்திய இடங்களில் இணையக் கோளாறு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி., எஸ்.டி., விடுதிகளில் பயோமெட்ரிக் பொருத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில் இதில் பிற்படுத்தப்பட்ட விடுதிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., விடுதிகளில் பொருத்தப்பட்ட இடங்களில் இணையக் கோளாறு காரணமாக முழுமையாக செயல்படுத்த முடிவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மாவட்டத்தில் 47 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் உள்ளன. எஸ்.சி., எஸ்.டி., விடுதிகள் 55 உள்ளன. இவற்றில் 35 விடுதிகள் மாணவர்கள் வருகை பதிவு இல்லாத காரணத்தால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்தாண்டு துவக்கம் முதல் ஆதிதிராவிட நல விடுதிகளில் பயோ மெட்ரிக் பொருத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் எண்ணிக்கையின் உறுதி தன்மை வேண்டி பிற திட்டங்களையும் செயல்படுத்த அரசு இவ்வாறு செய்தது. பொதுவாக பிறப்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிட நல விடுதிகளில் பெரும் பிரச்னையாக இருப்பது மாணவர்களின் எண்ணிக்கை தான். இலவச பஸ் பாஸ், சைக்கிள் போன்ற அரசு திட்டங்களாலும், மாணவர்கள் விடுதியில் தங்குவது குறைந்து வருகிறது. இருப்பினும் வார்டன்கள் இழுத்து பிடித்து நடத்தினாலும், சிலர் பொய் கணக்கு காட்டி நிதியை ஏய்ப்பதாக புகார் உள்ளது. இதனால் பயோமெட்ரிக் செயல்படுத்த வேண்டும் என்ற தொடர் கோரிக்கை காணமாக முதற்கட்டமாக ஆதிதிராவிடர் நல விடுதிகளில் கடந்த ஆண்டு முதலே பயோமெட்ரிக் பொருத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரகப் பகுதிகளில் உள்ள பயோமெட்ரிக் கருவிகள் போதிய தரமின்றி கொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மேலும் இணையமும் தொடர்பு எல்லைக்குள் இல்லை. இதனால் பயன்படுத்த முடியாத சூழலே உள்ளது. இன்னொரு பக்கம் அக். 15 முதல் பிற்படுத்தப்பட்ட விடுதிகளிலும் பயோமெட்ரிக் பொருத்தப்பட்டு வரும் சூழலில், அதற்கான பணிகள் இன்னும் விருதுநகர் மாவட்டத்தில் துவங்காமல் உள்ளன. வருகை பதிவை காரணம் காட்டி தான் அரசு சார்பில் விடுதிக்கு அனுப்பப்படும் திட்டங்களுக்கான நிதிகள், பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பயோமெட்ரிக்கில் கோளாறு ஏற்பட்டால் அது பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்தாண்டு மாணவர் சேர்க்கையை தடுக்கும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்து பிற்படுத்தப்பட்ட விடுதிகளிலும் பயோமெட்ரிக் வைப்பதை விரைவுப்படுத்தவும், எஸ்.சி., எஸ்.டி., விடுதிகளில் இணையக் கோளாறை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ