உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முகாம்கள், எஸ்.ஐ.ஆர்.,ஆல் மாநகராட்சியில் வரி வசூல்  பாதிப்பு: அடுத்தடுத்த பணிகளால் வளர்ச்சி பணிகளிலும் தொய்வு

முகாம்கள், எஸ்.ஐ.ஆர்.,ஆல் மாநகராட்சியில் வரி வசூல்  பாதிப்பு: அடுத்தடுத்த பணிகளால் வளர்ச்சி பணிகளிலும் தொய்வு

சிவகாசி மாநகராட்சியில் 55,933 சொத்து வரியினங்கள் மூலம் ரூ.22 கோடி, 2544 காலிமனை வரியினங்கள் மூலம் ரூ.92 லட்சம், 3,859 தொழில் வரியினங்கள் மூலம் ரூ.1.15 கோடி, 20,069 குடிநீர் இணைப்பு மூலம் ரூ.1.61 கோடி, 55,589 குப்பை வரியினங்கள் மூலம் ரூ.1.54 கோடி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்கள் மூலம் மொத்தம் ரூ.27 கோடி அளவுக்கு வரி வருவாய் கிடைக்கிறது. மாநகராட்சிக்கு சொந்தமான 164 கடைகள் மூலம் ரூ.55 லட்சம் வரியற்ற வருவாய் கிடைக்கிறது. மாநகராட்சியில் பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாமல் ரூ.11 கோடிக்கு மேல் நிலுவை வரி பாக்கி உள்ளது. இந்த நிதியாண்டில் தற்போது வரை நடப்பு வரி 48 சதவீதமும், நிலுவை வரி 11 சதவீதம் அளவுக்கு மட்டுமே வசூல் செய்யப்பட்டு உள்ளது. வரி வசூல் 50 சதவீதத்தைக் கூட தாண்டாததால் வரி வருவாயை மட்டுமே பிரதான ஆதாரமாக கொண்ட மாநகராட்சி பொது நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டு, அடிப்படை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்ட 100க்கும் மேற்பட்ட பணிகள் கிடப்பில் உள்ளது. கடந்த ஆண்டு கமிஷனர் , உதவி கமிஷனர்கள், பொறியாளர்கள் என வருவாய், பொது, சுகாதாரம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து பிரிவு அதிகாரிகளும் வீடு வீடாக சென்று வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டதால் கடந்த நிதியாண்டில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு உங்களுடன் ஸ்டாலின் முகாம், வார்டு சபை பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் முழுமையாக ஈடுபட்டதால் வரிவசூல் பாதிக்கப்பட்டது. மேலும் தற்போது எஸ்.ஐ.ஆர்., திருத்தப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதால், வரி வசூலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு 100 சதவீதம் வரி வசூல் இலக்கை எட்டுவதில் சிக்கல் நிலவுகிறது. கமிஷனர் சரவணன் கூறுகையில், இந்த நிதியாண்டிற்கான வரியை மக்கள் விரைந்து செலுத்த வேண்டும். இதனால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும், என்றார். இதே போல் ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் 53 சதவீதமும், விருதுநகரில் 50, சாத்துாரில் 54 சதவீதமும், அருப்புக்கோட்டையில் 50 சதவீதமும், ராஜபாளையத்தில் 52 சதவீதமும் என பாதி தான் வரி வசூல் ஆகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை