காலை உணவு திட்டத்தில் கூட ஊழல்
திருச்சுழி: குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தில் கூட தி.மு.க., அரசு ஊழல் செய்கிறது, என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.திருச்சிழியில் அ.தி.மு.க. சார்பில் நடந்த எம்.ஜி.ஆர் .,பிறந்த நாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பேசியதாவது: கிருதுமால் நதியையும் குண்டாறு நதியையும் இணைப்பதற்காக பழனிசாமி போட்ட திட்டம். கோதாவரியையும் வைகையையும் இணைப்பதற்கான இந்த திட்டம் அழகான திட்டம். இதில், 3 ஆயிரம் கோடி திருச்சுழி தொகுதிக்கு செலவிடப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை பேப்பரிலேயே இந்த அரசாங்கம் வைத்துள்ளது. இந்த திட்டப்படி கோதாவரியில் இருந்து காவிரியை இணைத்து, காவிரியில் இருந்து வைகையை இணைக்கும் பகுதியில் குண்டாறு இணைக்கப்பட உள்ளது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி வந்தவுடன் இது செயல்படுத்தப்படும் அ.தி.மு.க., ஆட்சியில் ஜெ., அறிவித்த திட்டங்கள் எல்லாம் மனிதநேய திட்டங்கள். இதில் 15 திட்டங்களை இந்த அரசு எடுத்துவிட்டது. தாலிக்கு தங்கம் திட்டத்தில் இன்றைக்கு 27 லட்சம் பெண்கள் கழுத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் தாலி ஜெ., கொடுத்தது. இந்த அரசு வந்தவுடன் இதை நிறுத்திவிட்டது. திருச்சுழி தொகுதி எல்.ஏ.,வான தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆக இருந்தும் பயன் இல்லை. இருந்த தொழிற்சாலையும் மூடப்பட்டது. புதிய தொழில் ஏதாவது துவங்கியுள்ளார்களா. ஜாதி மத பாகுபாடு இல்லாமல் இருப்பது அதிமுக மட்டும் தான். காலை உணவு திட்டத்தில் 50 சதவிகிதம் இந்த அரசு ஊழல் செய்கிறது என பேசினார்.