யானை புகுந்து தென்னை, வாழை சேதம்
ராஜபாளையம்:ராஜபாளையம் செண்பகத் தோப்பு அணைத்தலை ஆற்று பகுதியில் தென்னை, வாழை தோட்டத்தில் யானைகள் புகுந்து சேதம் விளைவித்ததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அணைத்தலை ஆறு ராக்காச்சி அம்மன் கோயில் பாதையில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, பலா, வாழை விவசாயம் நடந்து வருகிறது. ராஜபாளையத்தை சேர்ந்த தினேஷ் சங்கர், பாஸ்கர் உள்ளிட்டோரின் தோப்பில் புகுந்த யானை கூட்டம் தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து வனப்பகுதியில் இருந்து பாலாறு ஓடை வழியே விளை நிலங்களில் உட்புகும் காட்டு யானை கூட்டம் சாகுபடி நிலங்களை சேதப்படுத்துவதால் செய்வதறியாது தவிக்கின்றனர்.இது குறித்து தினேஷ்சங்கர்: நேற்று முன்தினம் தோப்பில் புகுந்த 3 யானைகள் கூட்டம் சிறிய தென்னை மரங்களின் குருத்துகளை பிடுங்கியும், தண்ணீர் தொட்டிகளை உடைத்தும், 5 வருடங்களாக பாதுகாத்து வளர்த்த மரங்களை சாய்த்தும், பலா காய்களை பறித்தும், 15 வாழை மரங்களை முற்றிலும் சேதப்படுத்தி சென்றுள்ளது.கோடையில் மட்டும் தண்ணீரைத் தேடி வரும் யானைகள் தற்போது இப்பகுதியில் தொடர்ந்து சுற்றி வருவதால் விளைநிலங்களுக்குள் உட்புகாதவாறு வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.