| ADDED : டிச 28, 2025 05:51 AM
அருப்புக்கோட்டை : மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும் உடற்பயிற்சிக்கும் வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் பராமரிப்பு இன்றி வீணானது.கிராமங்களில் உள்ள இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களை உடல் ஆரோக்கியத்தையும் மனவளத்தையும் மேம்படுத்தவும் உடல் பயிற்சிகள் செய்ய 2017ல், உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆயிரம் சதுர அடி பரப்பில் உடற்பயிற்சி செய்ய கருவிகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யவும், தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், விளையாட்டுப் போட்டிகளில் தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் இருந்தும் அதற்கு தேவையான உடற்பயிற்சி கருவிகள் இல்லாத நிலையை அறிந்து அரசு விளையாட்டு கருவிகளை அமைத்துக் கொடுத்துள்ளது. ஆனால், வட்டாரவளர்ச்சி அதிகாரிகள் கடமைக்கு ஊராட்சிகளில் உடற்பயிற்சி கருவிகளை அமைத்தனர். பல ஊராட்சிகளில் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட உபகரணங்கள் முறையான பராமரிப்பு இன்றி மழையிலும் வெயிலிலும் காய்ந்து துருப்பிடித்து சேதமடைந்து விட்டது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சுக்கிலநத்தம், ஆத்திப்பட்டி, திருவிருந்தாள்புரம், ராமானுஜபுரம், கோவிலாங்குளம் உள்ளிட்ட பல ஊராட்சிகளில் பராமரிப்பு இன்றி, உடற்பயிற்சி கருவிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி உபகரணங்களை அமைத்துள்ள இடங்களில் ஊராட்சி பணியாளர்கள் அவ்வப்போது செடி கொடிகளை அகற்றி சுத்தமாக வைத்திருந்தால், இளைஞர்கள் ஆர்வத்துடன் உடற்பயிற்சி செய்ய வருவர். உடற்பயிற்சிகள் இருந்தும் பயன்படுத்த முடியாமல் இருப்பதால் பயிற்சி செய்வதில் இளைஞர்களின் ஆர்வம் குறைந்து போனது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் கோடிக்கணக்கில் செலவழிக்கப்பட்ட நிதி வீணாக போய்விட்டது. மாவட்ட நிர்வாகம் ஊராட்சிகளில் சேதம் அடைந்து பராமரிப்பு இல்லாத உடற்பயிற்சி கருவிகளை மீண்டும் பயன்படுத்தும் வகையில் சரி செய்து தர வேண்டும்.