| ADDED : ஜூன் 20, 2024 04:10 AM
மாவட்டத்தில் நகர், ஊரகப்பகுதிகளில் பல மகளிர் குழுக்கள் உள்ளது. இதற்கு குழு தலைவியாக அப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து நல்ல பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு தெரிந்த நிதி நிறுவன கலெக் ஷன் ஏஜென்ட்களை அணுகி குழுவில் உள்ள பெண்களின் அடையாள அட்டை, ஆவணங்களை கொடுத்து கடனை பெற்று கொடுக்கின்றனர்.மேலும் புதியதாக கடன் தேவைப்படுபவர்களுக்கும் கடன் பெற்று கொடுத்து அதன் மூலம் கணிசமான தொகையை கமிஷனாக பெறுகின்றனர். இப்படி குழு தலைவியாக இருப்பவர்கள் தொடர்ந்து இதே பணியை செய்து வருவதால் பெண்களின் நம்பிக்கையை பெற்று விடுகின்றனர்.அதன் பின் குழுவில் உள்ள பெண்களிடம், குடும்பத்தில் மருத்துவம், கல்வி, கடன் பிரச்னைகள் உள்ளது. இதற்காக நிதி நிறுவனத்தில் உங்கள் பெயரில் கடனை பெற்று தாருங்கள், விரைவில் தந்து விடுகிறேன் என சில குழுத் தலைவிகள் ஆசை வார்த்தைகளை கூறி பணத்தை பெண்களிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொள்கின்றனர்.இதே பாணியில் பலரிடம் பணத்தை பெற்று, லட்சக்கணக்கான தொகை கிடைத்ததும் குடும்பத்துடன் தலைமறைவு ஆகின்றனர். கலெக் ஷன் ஏஜென்ட்கள் கடன் கொடுத்த பணத்தை கேட்பதற்காக நேரடியாக குழுவில் உள்ள பெண்களின் வீட்டிற்கு வரும் போது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிந்து தகராறு ஏற்படுகிறது. இதனால் பலரின் குடும்பங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயலும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இது போன்ற புகார்களில் மோசடி லட்சத்தில் துவங்கி கோடிகளில் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.இதில் மோசடி செய்தவர்கள் குறித்து புகார் அளித்தாலும், நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்பது நடக்காத ஒன்றாக மாறிவிட்டது. மாவட்டத்தில் மகளிர் குழுக்களில் நம்பிக்கை மூலம் பண மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.எனவே மாவட்ட நிர்வாகம் மகளிர் குழுக்களில் பணம் திருடுப்படுவது குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்கின்றனர்.