| ADDED : ஜன 09, 2024 11:59 PM
விருதுநகர் : மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, ஸ்ரீசத்யசாய் வித்யா வாஹினி தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து, இந்திய விண்வெளித்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள நேற்று விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த இஸ்ரோவின் 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' என்ற அறிவியல் வாகனத்தை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு பள்ளி மாணவர்களின் பார்வைக்கு திறந்து வைத்தார். பின் கலெக்டர், மாணவர்களிடம் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், டீப் டெக்னாலஜி, பின் டெக்னாலஜி, பிளாக் செயின் டெக்னாலஜி போன்றவைகள் தான் அடுத்து வரக்கூடிய உலகத்தை கொண்டு செல்ல இருக்கிறது.இந்த துறைகளை எல்லாம் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அறிவியலின் உதவியோடு வாழ்வின் இன்னல்களை தீர்த்து, நீங்களும் உங்கள் குடும்பமும், சமூகமும் உயர்வதற்கு முன்னேறுவதற்கு, இது போன்ற நிகழ்ச்சிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும், என்றார்.மூத்த விஞ்ஞானி சீனிவாசா, முதன்மைக்கல்வி அலுவலர் வளர்மதி, பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.