| ADDED : பிப் 04, 2024 04:13 AM
விருதுநகர் : ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானுலும் கட்சி துவங்கலாம். அந்த முறையில் நடிகர் விஜய் கட்சி துவங்கியுள்ளார். ஒரு கட்சி துவங்கினால் மற்றொரு கட்சிக்கு பாதிப்பு வராது என விருதுநகரில் தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்ட நிர்வாகம், தமிழ்இணைய கழகம் இணைந்து நடத்திய திருக்குறள் மாநாட்டின் நிறைவு விழா நேற்று கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று பேசினார்.இதில் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் அருள், தமிழ்வளர்ச்சி, செய்தித்துறை செயலாளர் சுப்பிரமணியன், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளர்மதி உள்பட பலர் பங்கேற்றனர்.அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறளை சிறப்பாக வாசித்த மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 31 மாணவர்களை தேர்ந்தெடுத்து உதவித்தொகையாக தலா ரூ. 15 ஆயிரம், சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்வி மட்டுமில்லாமல் தமிழ் உணர்வையும் ஏற்படுத்த வேண்டும். இந்த மாநாட்டை தமிழகம் முழுவதும் நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.வள்ளுவர் கோட்டம் பராமரிப்பதற்காக ரூ. 80 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. திருவள்ளுவர், காமராஜ், விடுதலை போராட்ட வீரர்களின் மணிமண்டபங்களில் கி.யூ.ஆர்., கோடு வசதி செய்யப்பட்டு, அவர்களின் வரலாற்றை செய்தித்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிந்துகொள்ளும் படியான வசதி அமைக்கப்படும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானுலும் கட்சி துவங்கலாம். அந்த முறையில் நடிகர் விஜய் கட்சி துவங்கியுள்ளார். ஒரு கட்சி துவங்கினால் மற்றொரு கட்சிக்கு பாதிப்பு வராது, என்றார்.