| ADDED : ஜன 04, 2024 01:38 AM
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் சத்யா நகரில் ரோட்டில் திரியும் மாடுகளால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்குகின்றனர். சிவகாசி மாநகாரட்சி பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் வேலை பார்ப்பதை தவிர பெரும்பாலானோர் பசு மாடுகள் வளர்க்கின்றனர். மாடுகளை வளர்ப்பவர்கள் பால் கறக்கும் நேரத்தில் மட்டுமே பிடித்துச் சென்று, மீண்டும் நகர் பகுதியில் விட்டுச் சென்று விடுகின்றனர். மாடுகளும் தங்கள் உணவிற்காக தெருக்கள், குடியிருப்புப் பகுதிகள், ரோட்டிலேயே நடமாடுகின்றன. திருத்தங்கல் சத்யா நகரில் பழைய சாட்சியாபுரம் ரோடு அருகே குப்பை கொட்டப்படுகின்றது. இங்கே மாடுகள் உணவிற்காக ரோட்டிலேயே நடமாடுகின்றன. இதனால் காலையில் அவசர வேலையாக டூவீலரில் செல்பவர்கள், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வாகனங்களில் செல்பவர்கள் ஹாரன் அடிக்கையில் மாடுகள் தெறித்து ஓடி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு சில மாடுகள் ரோட்டிலேயே நின்று வாகனத்திற்கு வழி விடுவதே இல்லை. கடந்த காலங்களில் மாநகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறையினர், போலீசார், சுகாதாரத் துறை இணைந்து ரோட்டில் திரிந்த மாடுகளை பிடித்து கோசலைக்கு அனுப்பியும், மலைவாழ் மக்களுக்கும் வழங்கினர். மேலும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் சில மாதங்கள் ரோட்டில் நடமாடும் மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் மாடுகள் ரோட்டில் நடமாடி விபத்தினை ஏற்படுத்துகிறது. எனவே மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.