| ADDED : பிப் 12, 2024 04:19 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் வேன், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் ஏர் ஹாரன் பொருத்துவது அதிகரித்துள்ளது. இந்த வாகனங்கள் திடீரென அதிக ஒலி எழுப்புவதால் சக வாகன ஓட்டிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர்.மாவட்டத்தில் உள்ள நகர், புறநகர், ஊரகப்பகுதிகள் வழியாக வேன், லாரி, பஸ் உள்பட கனரக வாகனங்களின் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களில் ஏர் ஹாரன் பொருத்துவது அதிகரித்துள்ளது.இவை புறநகர், ஊரகப்பகுதிகள் வழியாக செல்லும் போது ரோட்டின் ஒரங்களில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள், பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக வரக்கூடிய கர்ப்பிணிகள், நோயாளிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.மேலும் நுாலகத்தில் அமர்ந்து போட்டி தேர்வுக்காக படிப்பவர்களின் கவனம் சிதறுகிறது. இது போன்ற ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்களின் சப்ததால் ரோடு வழியாக மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள், ஆடுகள் மிரண்டு தெறித்து ஒடுகின்றன. அப்போது அவ்வழியாக டூவீலர், காரில் வருபவர்கள் கால்நடைகள் மீது மோதி நிகழும் விபத்துக்களும் அதிகரித்துள்ளது. ரோட்டில் டூவீலரில் செல்லும் இருதய பிரச்னைகள், மனஅழுத்தம், மனபதட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்னால் வந்து வாகனங்களில் அதிக ஒலி எழுப்புவதால் உயிரிழப்பு நிகழும் அபாயம் உள்ளது.இந்த வாகனங்களில் சுவிட்ச் சிஸ்டத்தை பொருத்தி போலீசார், போக்குவரத்து அலுவலர்களை கண்டதும் சாதாரண ஹார்ன் போல டிரைவர்கள் மாற்றி விடுகின்றனர். இதனால் ஏர் ஹாரன் பொருத்தப்பட்டிருப்பதையே வெளியே தெரியாதவாறு பார்த்துக்கொள்கின்றனர்.அதிக சப்தம் எழுப்புவதால் ஒலி மாசுபாடு ஏற்படுகிறது. பஸ், லாரி உரிமையாளர்கள் வாகனங்களில் ஏர் ஹாரன் பொருத்துவதால் சக வாகன ஓட்டிகள் அச்சத்தோடு ரோட்டில் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே போலீசார் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்களை கண்டறிந்து பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.