| ADDED : பிப் 18, 2024 12:30 AM
சிவகாசி: சிவகாசி அருகே வெள்ளூரில் துணை சுகாதார நிலையம் இல்லாததால் கர்ப்பிணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் சிறிய தலைவலி, காய்ச்சல் என்றால் கூட 13 கி.மீ., துாரம் உள்ள எரிச்சநத்தம் செல்ல வேண்டி உள்ளது என புலம்புகின்றனர்.சிவகாசி அருகே வெள்ளூர் ஊராட்சியில் முத்துக்குமாரபுரம், அம்மன் கோவில்பட்டி, சிதம்பராபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.ஆனால் இப்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி பெறுவதற்கு துணை சுகாதார நிலையம் கூட இல்லை. இதனால் சிறிய தலைவலி, காய்ச்சல் என்றால் கூட இப்பகுதி மக்கள் 13 கி.மீ., துாரம் உள்ள எரிச்சநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.தவிர கர்ப்பிணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பிரசவ காலத்தில் முதலுதவி சிகிச்சைக்கு கூட வழியில்லை. மேலும் எரிச்சநத்தத்திற்கு பஸ் வசதி இல்லாததால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் கட்டணம் கொடுத்து தான் செல்ல வேண்டியுள்ளது. எனவே வெள்ளூரை மையமாகக் கொண்டு துணை சுகாதார நிலையமாவது அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.