| ADDED : மார் 20, 2024 12:02 AM
விருதுநகர் : விருதுநகரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சக, திருமண மண்டப உரிமையாளர்கள், நகை அடகு கடை நடத்துவோர் ஆகியோருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.இதில் அச்சக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள்: போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் ஆகியவை அச்சடிக்கும் போது அச்சகத்தின் விபரமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவற்றில் உள்ள வாசகங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவோ அல்லது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலோ அமையக் கூடாது. அச்சடிக்கப்பட உள்ள எண்ணிக்கையை குறிப்பிட்டு பற்றுச் சீட்டு வழங்கப்பட வேண்டும். மேற்படி எண்ணிக்கையினை கூட்டியோ அல்லது குறைத்தோ காட்டக் கூடாது.சட்ட விதிமீறல் செய்வது தெரிந்தால் உரிமையாளர் மீது 6மாதம் சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் அச்சக உரிமமும் ரத்து செய்யப்படும்.திருமண மண்டப உரிமையாளர்களுக்கான அறிவுரைகள்: மண்டபத்தில் அரசியல் சார்பான நிகழ்ச்சிகள் எனில் போலீஸ்துறை உள்ளிட்ட பிற அனுமதிகள் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். உண்மையான கட்டண தொகை தெரிவிக்க வேண்டும். அரசியல் நிகழ்ச்சிகளில் பணமோ அல்லது பரிசு பொருட்களோ விநியோகம் செய்வதை கண்காணிக்க வேண்டும். கண்டறியப்பட்டால் உடனடியாக தாசில்தார், போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். வாக்காளர்களை கவரும் விதத்தில் மொத்தமாக சாப்பாடு, பிரியாணி போன்றவை தயாரிக்க அனுமதிக்க கூடாது.பரிசு பொருட்களை சேகரித்து வைக்கும் கோடவுனாக பயன்படுத்த அனுமதிக்க கூடாது.விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுரைகள்: ஓட்டுப்பதிவு நடக்கும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன் வெளியூர் நபர்களை மொத்தமாக தங்க அனுமதிக்க கூடாது.தேர்தல் முடியும் வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவு விபரங்களை அறிக்கையாக சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் தெரிவிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணமோ அல்லது பரிசு பொருட்களையோ பதுக்கும் விதத்தில் செயல்படுவோரை கண்டறிந்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.நகை அடகுதொழில் புரிவோருக்கு அறிவுரைகள்: எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் நகை அல்லது பத்திரத்தின் பேரில் கணிசமான ரொக்க தொகையை வழங்கும் முன், அவர் அரசியல் அல்லது வேட்பாளர் தொடர்புடையவரா என அறிந்து கொள்ள வேண்டும். வாக்காளர்களை கவரும் விதத்தில் டோக்கன் விநியோகத்தின் மீது பணமோ அல்லது பொருளோ கொடுத்திடக் கூடாது. இவ்வாறு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.