| ADDED : ஜன 12, 2024 12:41 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர்ஜன., பிப்., மாதங்களில் தொடர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு வேலை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.மாவட்டத்தின் 29 நெசவாளர்கள் சங்கங்களை சேர்ந்த 4500 பேர் பொங்கல் பண்டிகைக்கு அரசு தமிழகம் முழுவதும் இலவசமாக வழங்க 19.60 லட்சம் சேலைகள், தென் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு வழங்குவதற்கு 22 லட்சம் வேட்டிகள், 27.17 லட்சம் சேலைகளை நெய்து வழங்கி 100 சதவிகித இலக்கை முடித்து அனுப்பினர். இதனால் கைத்தறி, பேடல் தறி தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயன் அடைந்தனர். இந்நிலையில் அடுத்த பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை நெய்தல் பணிகள் செப்டம்பரில் தான் துவங்கும். மேலும் பள்ளி சீருடை நெய்து வழங்குவதற்கான பணிகள் வருகிற மார்ச் மாதத்தில் துவங்கும் என்பதால் ஜன., பிப்., என இரண்டு மாதங்கள் எவ்வித பணிகளும் இல்லை. இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு தொடர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை இல்லாத இந்த இரண்டு மாதங்களிலும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி வழங்க வேண்டும் என நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.