வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளை சீரமைக்க கோரிக்கை
ராஜபாளையம்: ராஜபாளையம் மலை அடிவாரத்தில் வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளை முறையாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வறட்சிக் காலத்தில் குடிநீர் ,உணவை தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் விலங்குகளால் விவசாய விளை பொருட்கள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் நேரங்களில் வேட்டையில் ஈடுபடுபவரிடம் சிக்குவதும், விபத்திற்கு உள்ளாகி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க மலை அடிவார பகுதிகளில் தண்ணீர் குட்டைகள் அமைத்து நீர் வற்று காலத்தில் அருகாமையில் நிலத்தடி போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டன.இது தவிர பல்வேறு பகுதிகளிலும் சிமெண்ட் தொட்டிகள் அமைக்கப்பட்டு வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. தண்ணீர் தொட்டிகளை விட இது போன்ற அமைப்புகள் அதிக இடங்களில் அமைப்பது சுலபமாக இருந்ததால் விலங்குகளின் தண்ணீர் தேவை கோடையில் சமாளிக்கப்பட்டன.இந்நிலையில் தண்ணீர் குட்டைகள் அமைத்ததால் சிறிய அளவிலான தண்ணீர் தொட்டிகள் பராமரிப்பு இன்றி சேதமடைந்து வருகிறது. இவற்றையும் முறையாக பராமரிப்பதன் மூலம் தண்ணீரைத் தேடி விலங்குகள் விளை நிலங்களுக்குள் நுழைவது தடுக்கப்படும் என வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.