| ADDED : நவ 23, 2025 04:43 AM
காரியாபட்டி: கழுவனச்சேரி கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாயில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால் மழைநீர் வீணாகிறது. தூர்வார வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி கழுவனச்சேரி கண்மாய்க்கு சென்னம்பட்டி கால்வாய் திட்டத்தின் கீழ் வரத்து கால்வாய் ஏற்படுத்தப்பட்டது. கரிசல்குளம் கண்மாய் வழியாக வரத்து கால்வாய் உள்ளது. கால்வாயில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி கிடக்கின்றன. மழைநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு, வீணாக வெளியேறி வருகிறது. கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாமல் போவதால், விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கின்றனர். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. சமீபத்தில் பெய்த மழைக்கு பல்வேறு கண்மாய்களுக்கு மழை நீர் சென்றது. இக் கண்மாய்க்கு மழை நீர் வராததால், வயல்கள் தரிசுகளாக உள்ளன. கால்வாய் தூர்வார விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும், கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, வீணாக மழை நீர் வெளியேறுவதை தடுக்க புதர் மண்டி கிடக்கும் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.