கட்டியும் செயல்படாத பேரூராட்சி அலுவலக கட்டடம்
வத்திராயிருப்பு:வத்திராயிருப்பில் புதிதாக கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகம் செயல்பாட்டுக்கு வராமல் பல மாதங்களாக வீணாகி வருகிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் துறை சார்பில் பல்வேறு பேரூராட்சிகளில் மூலதன நிதியிலிருந்து புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. ஒரு சில பேரூராட்சிகளில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. 2021- -22ல் வத்திராயிருப்பு பேரூராட்சியில் ரூ.1.1 கோடியில் புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி துவங்கியது. தற்போது புதிய அலுவலகம் கட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் திறப்பு விழா நடத்தப்படாமல் பயன்படுத்தப்படாத இந்த கட்டிடம் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் பழைய பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்ட நிலையில் புதிய கட்டடமும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே, இந்த புதிய பேரூராட்சி அலுவலக கட்டடத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வத்திராயிருப்பு பேரூராட்சி கவுன்சிலர்களும், மக்களும் எதிர்பார்க்கின்றனர்.