சிவகாசி ஆதிதிராவிடர் நல விடுதியில் குடிநீர் வினியோகம் இல்லை
சிவகாசி : சிவகாசியில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் குடிநீர் இணைப்பு இல்லாததால் மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். சிவகாசி சாட்சியாபுரம் புது காலனியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2005 ல் பள்ளி மாணவர் விடுதி கட்டப்பட்டது. இது ஆதிதிராவிடர் நலத்துறை கட்டடம் என்பதால் சொத்து வரி கிடையாது. விடுதிக்கு மாநகராட்சியில் தொழில் வரி கட்டப்பட்டு வருகிறது. நகராட்சி சார்பில் ஆரம்பத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.ஆனால் அதன்பின் பராமரிப்பு இல்லாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இங்கு கடந்த 6 மாதங்களாக ஆதி திராவிடர் கல்லுாரி மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. 64 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதிக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாததால் சமைப்பதற்கும், குடிப்பதற்கும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் மாதம் ரூ.6 ஆயிரம் வரை குடிநீருக்கு செலவு செய்து வருகின்றனர். விடுதிக்கு குடிநீர் இணைப்பு வழங்கக்கோரி மாநகராட்சியில் பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே குழாய் இணைப்பு கொடுத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.