| ADDED : ஆக 11, 2011 10:57 PM
சாத்தூர் : இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிவிழாவில், இன்று அம்மன் பவனி வருதல் நடைபெறுகிறது. விழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி விழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றுடன் துவங்கியது. இதை தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. பாதயாத்திரை, லாரிகள், பஸ்கள்,வேன்கள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இருக்கன்குடிக்கு ஏராளமான பக்தர்கள் தினம் வருகின்றனர். இவர்கள் முடிகாணிக்கை, பொங்கல், அக்னிசட்டி ஏந்துதல், ஆயிரங்கண்பானை எடுத்தல், குழந்தைகளுக்கு காதுகுத்துதல், நவதானியங்கள் வழங்கல் என நேர்த்தி கடன் செலுத்தி, அம்மøனை தரிசிக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பிற்பகல் 2மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ, அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பவனி வருதல் நடக்கிறது. பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இருக்கன்குடி கிழக்கு, மேற்கு, வடக்கு,தெற்கு பகுதிகளில் நான்கு தற்காலிக பஸ்ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சின்னையா டி.எஸ்.பி., தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள்குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, அறநிலையத்துறை உதவி ஆணையர் மாரிமுத்து மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.