ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக., 2 ல் நடக்கிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா நேற்று காலை கொடியேற்றுடன் துவங்கியது. இதையொட்டி, அங்குள்ள மணி மண்டபத்தில் அம்பாள், சுவாமி எழுந்தருளினர். கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு,கோபூஜை நடக்க , கொடியேற்றம் நடந்தது. கொடியை கோவிந்தராஜ பட்டர் ஏற்றினார்.
கோயில் தக்கார் ரவிச்சந்திரன்,செயல் அலுவலர் குருநாதன், கிரிபட்டர், ஸ்தானிகம் ரமேஷ், கிச்சப்பன்,வேதபிரான் பட்டர் சுதர்சனம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு பதினாறு வண்டி சப்பரத்தில் அம்பாள், சுவாமி வீதி உலா நடந்தது. ஆக., 2 முடிய 10 நாள் நடக்கும் விழாவில் தினமும், அம்பாள்,சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதிஉலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 29ம் தேதி மங்களாசாசனம், அன்று இரவு ஐந்து கருட சேவை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆக., 2 ல் நடக்கிறது. அன்று காலை 4 மணிக்கு ஏகாந்தி திருமஞ்சனம், தொடர்ந்து அம்பாள், சுவாமி தேரில் எழுந்தருள்கின்றனர்.