| ADDED : ஜூலை 25, 2011 10:19 PM
விருதுநகர் : பருத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், தேசிய மார்கெட் விலை நிலவரத்தை அறிய தகவல் மையம் அமைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பருத்திக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தில் தவிப்பதாக குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் கலெக்டர் பாலாஜி ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் பிரச்னைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ''உற்பத்தி செலவு, விற்பனை விலையை கணக்கிட்டு அறிக்கை தயாரிக்க விவசாய இணை இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தி காய் பிடுங்குவதற்கு தொழிலாளர்கள் இல்லை என்பதால் இயந்திர மயாக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். பருத்தியின் தேசிய மார்க்கெட் நிலவரத்தை விவசாயிகள் அறிந்து கொள்ள தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. கூட்டுறவு பருத்தி அரவை இயந்திரங்களை பழுது நீக்கம் செய்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கூட்டுறவு விற்பனை சங்க கட்டடத்தில் பஞ்சுகளை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,''என்றார்.மேலும், ''விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையில், தனியார் மில் அதிபர்களுடன் ஒருங்கிணைந்து ,விவசாய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள,'' உத்தரவிட்டார். விவசாய இணை இயக்குனர் முருகதாஸ், நேர் முக உதவியாளர் ஜெயபாண்டியன், மார்க்கெட்டிங் துணை இயக்குனர் கணேசன், இந்திய பருத்தி கழக அலுவலர் சக்திவேல் உட்பட சென்றனர்.