உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு தொழிலாளர் நல வாரியம் அமைப்பது எப்போது

பட்டாசு தொழிலாளர் நல வாரியம் அமைப்பது எப்போது

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் பட்டாசு விபத்துக்களில் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இறந்தோர் குடும்பத்தின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் பட்டாசு தொழிலாளர் நல வாரியம் அமைப்பது பற்றி அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகளை நெருங்க உள்ள நிலையில் தற்போது வரை வாரியம் அமைக்கப்படவில்லை. அ.தி.மு.க., அறிவித்ததால் வேண்டும் என்று புறக்கணக்கிறதா என பட்டாசு தொழிலாளர்கள் குமுறுகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்துார், விருதுநகர் ஆகிய பகுதிகளில் 1085 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் 770 ஆலைகள் நாக்பூர் உரிமம் பெற்றவை. 315 ஆலைகள் டி.ஆர்.ஓ., உரிமம் பெற்றவை. 2023 அக்டோபரில் சிவகாசி ரங்கபாளையம் பட்டாசு ஆலை விபத்தில் 13 பேர் பலியாகினர். 2011 முதல் 2023 அக்டோபர் வரை 190 விபத்துக்களில் 337 பேர் இறந்தனர். 303 பேர் காயமடைந்துள்ளனர்.பெரிய விபத்தாக விருதுநகர் முதலிப்பட்டியில் நடந்த விபத்தில் 40 பேர் இறந்தனர். சாத்துார் அச்சங்குளம் விபத்தில் 27 பேர் இறந்தனர். முதலிப்பட்டி விபத்து ஏற்பட்ட காலத்தில் இருந்தே பட்டாசு விபத்துக்களை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக ஆய்வுக்குழுக்களை நியமித்து மாவட்ட அளவில் கண்காணிப்பு செய்கின்றனர்.வருவாய், போலீஸ், தீயணைப்பு, தொழிலக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என பலதரப்பு ஆய்வு நடக்கிறது. இருப்பினும் ஆலைகளில் விதிமீறல் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரிக்க தான் செய்கிறது.2023 ஜனவரி, பிப்ரவரியில் 20 பேர் பலியாகி உள்ளனர். பட்டாசு விபத்தில் இறப்போருக்கு போதிய நிவாரணம் கிடைப்பதில்லை. சமூக பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை அறிந்த அப்போதைய அ.திமு.க., அரசு 2020ல் பட்டாசு தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்தது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகளை நெருங்க உள்ள நிலையில் தற்போது வரை நல வாரியம் அமைப்பதற்கான பணிகள் முழுமைப்படுத்தப்படவில்லை.2024 பிப்., 17 ல் நடந்த வெம்பக்கோட்டை ராமுதேவன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் இறந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணமாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்நிலையில் முதன் முறையாக தமிழக அரசின் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.இருப்பினும் பட்டாசு தொழிலாளர்களுக்கு என தனியாக நல வாரியம் அமைத்தால் நிவாரணம் கூடுதலாக கிடைக்கும் என்கின்றனர் இறந்தோரின் உறவினர். கிடைக்கும் தொகை மூலம் இறந்த ஒருவரை மட்டுமே நம்பி இருந்த குடும்பத்தின் சமுக பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். ஆனால் திமு.க., அரசு தொடர்ந்து பட்டாசு நல வாரியம் அமைப்பதை தாமதப்படுத்தி வருகிறது. அ.தி.மு.க., அரசு அறிவித்ததாலேயே தாமதம் செய்கிறதா என்று பட்டாசு தொழிலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ