மேலும் செய்திகள்
கண்மாய் காப்போம்
10-Apr-2025
விருதுநகர்: விருதுநகர் அருகே ஓ.முத்துலாபுரம் கண்மாய் ஷட்டர் பழுதுக்கு தீர்வு எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஏக்கம் அதிகரித்துள்ளது.விருதுநகர் அருகே ஓ.முத்துலாபுரம் கண்மாய் 35 எக்டேரை கொண்டுள்ளது. இதை சுற்றியுள்ள பகுதிகளில் கிணற்றுபாசனத்தை நம்பி மக்காசோளம், பருத்தி, தட்டாம்பயறு, பாசிப்பயறு, வெண்டை போன்ற சாகுபடிகளின் மூலம் விவசாயம் செழித்திருந்தது. தற்போது கண்மாய் வறண்டதால் கிணற்றுப்பாசனம் அடியோடு நின்று விட்டது. 2023 டிச.ல் அதிகமாகபெய்த மழையால் கண்மாய் தண்ணீர் கொள்ளளவை தாண்டியது. ஷட்டர் பழுதானதால் அதை திறக்க முடியவில்லை. கடைசியில் கரை உடைந்து தண்ணீர் ஊருக்குள் சென்று வெள்ளக்காடாய் மாறியது. இதனால் கிராமத்தில் பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டது.இன்று வரை உடைந்த கண்மாய் கரையை நீர்வளத்துறை சரி செய்யவில்லை. ஊராட்சி நிர்வாகம் மூலம்தான் பாதி சரி செய்யப்பட்டுள்ளது.கண்மாய் மடையில் தண்ணீர் கசிவது 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது. அதற்கும் தீர்வு இல்லை. மஞ்சணத்தி, கருவேல மரங்கள் வளர்ந்து கண்மாய் கரையில் நடந்து செல்ல முடியாத நிலையே உள்ளது. நீர் தேக்குமிடமான கண்மாயின் உள்பகுதியிலும் முழுக்க முழுக்க கருவலே மரங்கள் வளர்ந்து அடர்வனமாகி விட்டது. கண்மாய் வறண்டதால் நிலத்தடி நீரின் சுவை மாறிவிட்டது. பி.எச்., அளவு அதிகமாகிவிட்டது. இதனால் மினரல் குடிநீர் வாங்கிதான் பயன்படுத்துகிறோம். இங்கு வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் அதிகம். தினசரி ரூ.25 வரை செலவு செய்கின்றனர். கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளது. கண்மாய்க்குள்ளேயே தனியார் ஆலைகளுக்காக ஓடையை ஆக்கிரமித்து பாதை போட்டுள்ளனர். இதை எதிர்த்து எத்தனை மனு போட்டாலும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் புலம்புகின்றனர். வண்டல் மண் அனுமதி வாங்கி கொண்டு கிராவலும் கடத்தப்படுகிறது. பக்கத்தில் எந்த ஆலை திறந்தாலும் இங்கிருந்து தான் கிராவல் அள்ளி அனுப்பப்படுகிறது. கிணறு மீண்டும் ஊறும்
சந்திரன், சமூக ஆர்வலர்: பெரிய கண்மாயை பராமரித்து நீரை தேக்கும் திறனை மீண்டும் அதிகரித்தால் மட்டுமே கிணறுகள் ஊறும் அதுவரை விமோசனம் இல்லை. ஒரு காலத்தில் விவசாயம் செழித்திருந்த பகுதி தற்போது மோசமான நிலையில் உள்ளது. விருதுநகர் ஒன்றியத்தின் கடைசிப்பகுதியில் இருப்பதால், பெரிய அளவில் அதிகாரிகளின் கவனம் படுவதில்லை. இந்த நீர்வளத்துறை கண்மாயை மீட்டு மீண்டும் கிணறுகளை ஊற செய்ய வேண்டும். நிலத்தடி நீரும் பெருகும்
அருணாச்சலம், விவசாயக்கூலி: தற்போது நிலத்தடி நீரின் உவர்ப்பு தன்மை அதிகரித்துள்ளது. இதனால் சிறுநீரக கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.இதனாலயே தினசரி செலவு செய்து குடிநீர் குடிக்கிறோம். இங்குள்ள மக்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்கள், பின்தங்கியவர்கள் தான். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடர்வனமாய் கண்மாய்
ஆறுமுகம், விவசாயகூலி: கேட்பாரற்று போனதாலும், மடைகள் பழுதானதாலும் கண்மாயில் கருவேல மரங்கள் அதிகரித்து விட்டன. எங்கள் ஊர் விவசாயம் பாழாகி விட்டது. கிணற்று பாசனம்பொய்த்து போய்விட்டது. நீர்வளத்துறையை நம்பி உள்ளோம். கண்மாயின் ஷட்டர் பழுதுக்கு தீர்வு காண வேண்டும். மடைகளை சீரமைக்கவேண்டும். தீர்வு காண வேண்டும்
சங்கரலிங்கம், விவசாயக்கூலி: எங்கள் ஊரின் வாழ்வாதாரமே கண்மாயை நம்பிதான் உள்ளது. தற்போது அது வறண்டு காணப்படுவது வேதனை அளிக்கிறது. இதனால் பலர் விவசாயத்தை கைவிட்டு பட்டாசு தொழிலுக்கு செல்ல துவங்கி உள்ளனர். மாவட்ட நிர்வாகம் எங்கள்பகுதிக்கு சிறப்பு கவனம்எடுத்து தீர்வு காண வேண்டும்.
10-Apr-2025