உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர்களுக்கு இன்று முதல் "பூத் சிலிப்

வாக்காளர்களுக்கு இன்று முதல் "பூத் சிலிப்

சென்னை : 'சென்னை மாநகராட்சி வாக்காளர்களுக்கு, இன்று காலை முதல், 'பூத் சிலிப்' கொடுக்கும் பணி துவங்குகிறது,'' என, மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் அலுவலருமான கார்த்திகேயன் கூறினார். இதுகுறித்து, நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது : மாநகராட்சி தேர்தலை கண்காணிப்பதற்காக தேர்தல் பார்வையாளர்கள் மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வெங்கடேசன், ஒன்று முதல் ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளின் தேர்தல் பணிகள் மற்றும் நடைமுறைகளைப் பார்வையிடுகிறார். ஆறு முதல் 10 மண்டலங்களின் பணிகளை சந்திரமோகனும், 11 முதல் 15 வரையிலான மண்டலங்களின் பணிகளை ரமேஷ்சந்த் மீனாவும் தேர்தல் பார்வையாளராக கண்காணிக்கின்றனர்.

தேர்தல் விதி மீறல், முறைகேடுகள் உள்ளிட்ட புகார்களை வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் தேர்தல் பார்வையாளர்களிடம் தொலைபேசி மூலமும் தெரிவிக்கலாம். இதற்காக, ரமேஷ்சந்த் மீனா (86089 35976), சந்திரமோகன் (86089 35629), வெங்கடேசன் (86089 35421) ஆகியோருக்கு தனி மொபைல் போன் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' கொடுக்கும் பணி, இன்று காலை முதல் துவங்குகிறது. இதற்காக, 22 லட்சத்து 42 ஆயிரத்து 656 ஆண் வாக்காளர்களுக்கான 'பூத் சிலிப்'களும், 22 லட்சத்து 6 ஆயிரத்து 85 பெண் வாக்காளர்களுக்கான 'பூத் சிலிப்'களும் என, 44 லட்சத்து 49 ஆயிரத்து 55 'பூத் சிலிப்'கள் தயார் நிலையில் உள்ளன. இரண்டு அல்லது மூன்று நாள்களில் 'பூத் சிலிப்' கொடுக்கும் பணி முடிவடையும்.

'பூத் சிலிப்' கிடைக்காதவர்களுக்கு, ஓட்டுப்பதிவு தினத்தன்று, ஓட்டுச் சாவடி முன், 'பூத் சிலிப்' கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கும் 'பூத் சிலிப்' வழங்கப்படும்.

பதட்டமான ஓட்டுச் சாவடிகள் : மாநகராட்சி பகுதியில், 1,900 ஓட்டுச் சாவடிகள் பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுக்கு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். மற்ற ஓட்டுச் சாவடிகள் போலீசாரின் தொடர் கண்காணிப்பில் உள்ளன. அவற்றின் நிலையை அடிப்படையாகக் கொண்டு, பதட்டமான ஓட்டுச் சாவடிகளா என, பின்னர் அறிவிக்கப்படும்.

ஓட்டு எண்ணிக்கை : மேயர் மற்றும் 200 வார்டு கவுன்சிலருக்கான ஓட்டு எண்ணிக்கையை 18 இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மேயர் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களின் ஓட்டுகள் ஒரே நேரத்தில் எண்ணப்படும். ஓட்டுப் பதிவுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் வார்டுகளில் இரண்டு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுவதால், கூடுதலாக 2,000 ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. அவை, ஓரிரு நாளில் தயார் செய்யப்படும்.

தேர்தல் பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பணியாளர்கள், தவறாமல் பயிற்சி வகுப்புகளிலும், தேர்தல் பணியிலும் பங்கேற்க வேண்டும். தேர்தல் பணிக்கு வராத பணியாளர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை