| ADDED : ஆக 20, 2024 08:21 PM
அ.தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக உள்ள 83 மாவட்டங்கள், 100 ஆக அதிகரிக்கப்பட உள்ளன. கூடுதலாக 15 பேருக்கு மாவட்டச்செயலர்கள் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. அ.தி.மு.க.,வில் தற்போது, 82 மாவட்டச்செயலர்கள் உள்ளனர். மகளிர், இளைஞர் என, 17 அணிகளுக்கு மாநில செயலர்கள் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஓட்டு சதவீதம், கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெற்றதை விட குறைந்துள்ளது.அதனால், கட்சியை கட்டமைக்கும் வகையில், மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டச்செயலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச்செயலர் என கூடுதலாக, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உருவாக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக, 100 மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வார இறுதிக்குள் புதிய மாவட்டச்செயலர்கள் பட்டியலை வெளியிட, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். சசிகலா, பன்னீர்செல்வத்தை தீவிரமாக எதிர்ப்பவர்களுக்கும், மாற்று கட்சிகளில் இருந்து வந்து தீவிரமாக கட்சிப் பணியாற்றுவோருக்கும் இப்பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்படவிருப்பதாக தெரிகிறது. மிக முக்கியமாக, பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களே அதிகளவில் இடம்பெறும் வகையில், இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாக, அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.- நமது நிருபர் -