| ADDED : ஏப் 20, 2024 11:06 PM
சென்னை:அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., பழனிசாமி அறிக்கை:லோக்சபா தேர்தலில், தி.மு.க., 35 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறலாம். ஆனால், அது மக்களின் நம்பிக்கையை பெற்றதால் அல்ல. சரியான மாற்று கட்டமைப்பு ஏற்படாததால் மட்டுமே அந்த வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. தி.மு.க.,வின் அடிப்படை தொண்டர்கள் கூட மன வருத்தத்தில் தான் இருக்கின்றனர்.அண்ணாமலை சமூக வலைதள பிரசாரங்களை மட்டுமே முன்னெடுத்து, தன் கட்சியில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டி, தான் மட்டுமே பா.ஜ., என்றும், தான் ஒரு மாற்றத்துக்கான தலைவர் போலவும் முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். ஆனால், அவர் வெற்றி அடைய பயணித்த பாதை, மக்கள் மத்தியில் நம்பிக்கை பெறுவதாக அமையவில்லை.ஒரு வேட்பாளராக இருப்பவர், தேர்தல் காலத்தில் என்ன பேச வேண்டும்; எதை தவிர்க்க வேண்டும் என்பது கூட புரியாமல் பேசி சர்ச்சைகளை உருவாக்கினார். அந்த வகையில், அவர் மக்களின் நம்பிக்கையை பெற தவறி விட்டார்.அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது சரியான முடிவு என்றாலும், வேட்பாளர் தேர்வு, பிரசார உத்திகள், சமூக வலைதளம் போன்ற பிரசாரக் களத்தை கட்டமைக்கவில்லை. தான் எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ இல்லை என்பதை பழனிசாமி மறந்து விட்டார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.