உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய வழித்தடத்தில் காற்றாலைகளை இணைக்க ஒரு மெகா வாட்டிற்கு ரூ.50 லட்சம் கட்டணம்

மத்திய வழித்தடத்தில் காற்றாலைகளை இணைக்க ஒரு மெகா வாட்டிற்கு ரூ.50 லட்சம் கட்டணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் காற்றாலை அமைத்து, மத்திய மின் தொடரமைப்பு நிறுவனத்தின் வழித்தடத்தில் இணைப்பதற்கு, ஒரு மெகா வாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்து, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, தொழில் துறையினரிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள் காற்றாலை மின் நிலையம் அமைக்கின்றன. பல நிறுவனங்கள் காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, சொந்த தேவைக்கு பயன்படுத்துகின்றன. சில நிறுவனங்கள் மின் வாரியத்திற்கு விற்கின்றன. இந்நிறுவனங்கள், மின் வாரியத்தின் வழித்தடத்தை பயன்படுத்த, 'வீலிங் சார்ஜ், டிரான்ஸ்மிஷன் சார்ஜ்' உள்ளிட்ட கட்டணங்களை செலுத்துகின்றன. இது தவிர, சில நிறுவனங்கள், தமிழகத்தில் காற்றாலை மின் நிலையம் அமைத்து, மத்திய அரசின், 'பவர்கிரிட்' நிறுவனம், மத்திய மின் தொடரமைப்பு நிறுவன துணை மின் நிலையங்களில் வழங்குகின்றன. இந்த மின்சாரம், மத்திய வழித்தடம் வாயிலாக, பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அதன்படி தமிழகத்தில், 1,800 மெகா வாட் திறனில் உள்ள காற்றாலைகள், மத்திய வழித்தடத்தில் இணைக்கப்பட்டு உள்ளன. மத்திய வழித்தடங்களில் மின்சாரத்தை வழங்கும் காற்றாலைகளுக்கு, மின் வாரியம் கட்டணம் வசூலிப்பதில்லை. இந்நிலையில், இனி தமிழகத்தில் காற்றாலை அமைத்து, மத்திய மின் வழித்தடத்தில் இணைக்கப்படும் மின்சாரத்திற்கு, 'ரிசோர்ஸ் சார்ஜ்' என்ற பெயரில், ஒரு மெகா வாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்க, மின் வாரியத்தின் துணை நிறுவனமான தமிழக பசுமை எரிசக்தி கழகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, தொழில் துறையினரிடம் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து, காற்றாலை முதலீட்டாளர்கள் கூறியதாவது: குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், காற்றாலை மின் நிலையம் அமைப்பதை ஊக்குவிக்க, அரசு நிலத்தை கையகப்படுத்தி குத்தகைக்கு வழங்குகின்றன. ஆனால், தமிழகத்தில் தனியாரிடம் விலை கொடுத்து நிலம் வாங்கி, மின் நிலையம் அமைக்கப்படுகிறது.அந்த மின்சாரத்தை மத்திய வழித்தடத்தில் இணைப்பதால், மின் வாரியத்திற்கு எந்த செலவும் இல்லை. இதற்கு எதற்கு ஒரு மெகா வாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும்? இந்த விவகாரம் தொடர்பாக, சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தரப்படுமா தனி கொள்கை?

தமிழகத்தில் காற்றாலை மின் நிலையம் அமைப்பதை ஊக்குவிக்க, 'பேங்கிங்' சலுகையை மின் வாரியம் வழங்கியது. பேங்கிங் என்பது காற்றாலை மின்சாரத்தை நிறுவனங்கள், தேவைக்கு பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திடம் வழங்கி, தேவை ஏற்படும்போது பெறுவதாகும். இந்த முறையில், 100 யூனிட் மின்சாரம் வழங்கினால், மின் வாரியம் திரும்ப வழங்கும்போது, 14 யூனிட் எடுத்து கொண்டு, 86 யூனிட்டை வழங்கும். கடந்த 2018க்கு பின் அமைக்கப்படும் காற்றாலைக்கு பேங்கிங் முறை இல்லை. தமிழகத்தில், காற்றாலை மின் திட்டத்தை ஊக்குவிக்கும் சலுகை தொடர்பாக, தனி கொள்கை இல்லை. பல நிறுவனங்கள், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் முதலீடு செய்கின்றன. பல ஆண்டுகளாக காற்றாலை நிறுவு திறனில், தமிழகம் முதலிடத்தில் இருந்தது. இறுதியாக, 2023 ஜனவரியில் தமிழகம், 9,964 மெகா வாட் உடன் முதலிடத்திலும், குஜராத், 9,918 மெகா வாட் உடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன. அடுத்த இரு மாதங்களில் முதலிடத்தை பிடித்த குஜராத், தொடர்ந்து அதே இடத்தில் உள்ளது. கடந்த மாத நிலவரப்படி, குஜராத்தில், 12,132 மெகா வாட்; தமிழகத்தில், 10,880 மெகா வாட் திறனில் காற்றாலைகள் உள்ளன. எனவே, காற்றாலைகளில் தமிழகத்தில் அதிக முதலீடுகளை ஈர்க்க, சலுகைகள் அடங்கிய கொள்கை எதிர்பார்த்து, முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர்.

கட்டணம் நிர்ணயிப்பு ஏன்?

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாட்டில், காற்றாலை மின்சாரத்திற்கு சாதகமான சூழல் தமிழகத்தில் தான் நிலவுகிறது. மத்திய மின் வழித்தடத்தை பயன்படுத்தவில்லை என்றாலும், அதற்கான செலவை மாநில வாரியங்கள் செலுத்துகின்றன.மத்திய மின் துறை, இந்த நிதியாண்டில் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்வதில், 0.67 சதவீதமாக உள்ள காற்றாலை மின்சாரத்தின் பங்கை, 2029 - 30ல் 3.48 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இதனால், பல நிறுவனங்களும் காற்றாலை அமைக்க உள்ளன. தமிழக மின் வாரியமும், தனியாருடன் இணைந்து, 2030க்குள் 5,000 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது.எனவே, தமிழகத்தில் காற்றாலை மின் நிலையம் அமைத்து, தமிழகத்தில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் தான், மத்திய வழித்தடத்தில் இணைக்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
ஆக 11, 2024 14:22

நியாயம்தானே? தமிழகத்தில் வீசும் காற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான வரி. அதாவது காற்றுக்கும் வரி. அடுத்து மூச்சு விடுவதற்கும் வரி போடுவார் விடியல். ஆனால் காற்றாலைகளுக்கான காற்று கேரளப் பகுதிகளிலிருந்துதான் வருகிறது என்பதால் அடுத்து பினராயியும் வரி போடுவார்.பெயர் INDI வரி.


Swaminathan L
ஆக 11, 2024 09:54

சுற்றி வளைப்பானேன்? தமிழகத்தில் காற்றாலை அமைத்தால் அதன் உற்பத்தி மொத்தமும் தமிழகம் மட்டுமே நுகர வேண்டும். மத்திய வழித்தடத்தில் இணைத்தால் அது தமிழகத்துக்கு பயன் தராது. அதனால், கட்டணம் ரூ. 50 லட்சம். இது கட்டணம் என்றாலும் சரி, மறைமுக அபராதம் என்று புரிந்து கொண்டாலும் சரி.


ஆரூர் ரங்
ஆக 11, 2024 09:51

இது எப்படி இருக்கிறது? சொந்த வீட்டை செப்பனிட சொந்தக்காசில் சிறிது மணல், சிமெண்ட் வாங்கி வாசலில் வைத்திருந்தேன். சற்று நேரத்தில் ஒரு திராவிஷ கவுன்சிலரின் ஆள் வந்து யாரைக் கேட்டு இதை செய்கிறீர்கள்? எங்களை கவனிக்காமல் எப்படி செய்யலாம் என மிரட்டினார். அவன் கேட்டது மணல் சிமெண்ட் விலையை விட அதிகம். 21 ம் பக்க ...க்களை எதிர்த்து என்ன செய்ய முடியும்?


selva
ஆக 11, 2024 16:20

நம்ம ஊரு மின்சாரத்தை பக்கத்துக்கு மாநிலத்துக்கு அனுப்பறதுக்கு நமக்கு காசு கொடுக்காம்மா எதுக்கு நமக்கும் எதாவது வேணும்ல


Varadarajan Nagarajan
ஆக 11, 2024 08:24

மின் கட்டணத்தை உயர்த்தினால் நுகர்வோருக்கு உடனடியாக அதன் தாக்கம் தெரியும். தவிர எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கும். எனவே அதைவிடுத்து இதர கட்டணங்களில் உயர்த்தினாள் உடனடியாக நுகர்வோருக்கு தெரிய வராது. முன்பெல்லாம் மின் நுகர்வு இல்லாமல் இருந்தால் மினிமம் சார்ஜ் என வசூலிக்கப் பட்டது. ஆனால் இப்பொழுது மின் நுகர்வுக்கும் கட்டணம் செலுத்தும்போது அத்துடன் சேர்த்து நிலையான கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இது நுகர்வோருக்கு என்னவென்று தெரிவதில்லை. அதுபோல் மறைமுக கட்டணங்களை வாரியம் கணிசமாக உயர்த்துகிறது. விண்ணப்ப கட்டணம், மின் மறு இணைப்பு கட்டணம், வீலிங் கட்டணம் போன்றவற்றை உயர்த்தியுள்ளது. ஆனால் வாரியம் மின் உற்பத்தியில் கவனம் செலுத்துவதால் வெளியிலிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பதால் அதிக செலவாகிறது


Muthu Kumaran
ஆக 11, 2024 07:51

அப்ப தான் 2026 தேர்தலுக்கு முன் லம்பாக ஒரு கலெக்ஷன் பார்க்க முடியும்.


Kasimani Baskaran
ஆக 11, 2024 07:29

தினமும் ஒரு பொன்முட்டை என்பதை விட ஒரே நேரத்தில் வாத்தை வெட்டினால் அணைத்து பொன் முட்டைக்கும் ஈடாக ஒரு தொகை நிர்ணயித்து இருக்கிறார்கள்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ